திருநங்கைகளை துன்புறுத்துபவர்கள் மீது நடவடிக்கை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு


திருநங்கைகளை துன்புறுத்துபவர்கள் மீது நடவடிக்கை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 20 Jan 2020 11:00 PM GMT (Updated: 20 Jan 2020 5:05 PM GMT)

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் திருநங்கைகளை துன்புறுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருநங்கைகள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது விலையில்லா வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, வங்கி கடன், பசுமைவீடு, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 250 மனுக்கள் பெறப்பட்டது.

கூட்டத்தில் ஆலங்குடி தாலுகா குழந்தை விநாயகர்கோட்டையில் கிராம உதவியாளர் நிலையில் இருந்து கிராம நிர்வாக அதிகாரியாக பதவி உயர்வு பெற்ற காமாட்சிக்கு பதவி உயர்வு ஆணையினை கலெக்டர் உமா மகேஸ்வரி வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சரவணன், வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

திருநங்கைகள் மனு

கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட திருநங்கைகள் உரிமை மற்றும் மறுவாழ்வு மையம் சார்பில் ஏராளமான திருநங்கைகள் கொடுத்த மனுவில், நாங்கள் கடந்த 2010-ம் ஆண்டு முதல் எங்களுக்கு புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் ஊராட்சியில் உள்ள கல்லாங்குளத்தில் அரசு இலவசமாக இடம் கொடுத்தது. இந்த இடத்தில் நாங்கள் தற்போது வசித்து வருகிறோம். கடந்த 2 மாதங்களாக சமூக விரோதிகள் எங்களது இடத்தில் உள்ள பாதையை பயன் படுத்தி வருகின்றனர்.

இந்த பாதையில் செல்லும் சிலர் எங்கள் பகுதியில் செல்லும்போது எங்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் எங்களுக்கு சொந்தமான கால்நடைகளையும் துன்புறுத்தி வருகின்றனர். எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து எங்களது பாதையை அடைத்து கொடுத்து, எங்களை துன்புறுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, எங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் எனக் கூறியிருந்தனர்.

Next Story