சப்-இன்ஸ்பெக்டர் கொலையில் தொடர்பா? தென்காசியில் 5 பேர் அதிரடி கைது - தேசிய புலனாய்வு பிரிவினர் விசாரணை
தென்காசியில் 5 பேரை அதிரடியாக கைது செய்த போலீசார், அவர்களுக்கு சப்-இன்ஸ்பெக்டர் கொலையில் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரித்தனர். மேலும், இதுதொடர்பாக தேசிய புலனாய்வு பிரிவினரும் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.
தென்காசி.
குமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சாவடியில் கடந்த 8-ந்தேதி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள், வில்சனை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். இதில் தொடர்புடைய பயங்கரவாதிகள் சிலரை போலீசார் கைது செய்து உள்ளனர். மேலும், இவர்களுக்கு உதவி செய்தவர்களையும் போலீசார் பல்வேறு இடங்களில் பிடித்து கைது செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களையும் தேடி வருகிறார்கள்.
இதற்கிடையே, வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் நெல்லை பேட்டை ரகுமான்பேட்டையை சேர்ந்த அல்கபீர் என்ற வாலிபர் மீதும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து மறுநாள் போலீசார் பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று அதிரடியாக சோதனை நடத்தினர்.
அப்போது அவர் 5 நாட்களாக வீட்டுக்கு வரவில்லை என்ற தகவல் கிடைத்தது. மேலும் கேரளாவுக்கு தப்பி சென்றிருக்கலாம் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் தென்காசி போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு அல்கபீர் உள்பட 5 பேரை அதிரடியாக கைது செய்த பரபரப்பான தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அவர்கள், தென்காசி மதினா நகரை சேர்ந்த சாகுல்அமீது மகன் முகமது சக்கரியா (வயது 37), நெல்லை பேட்டை ரகுமான்பேட்டையை சேர்ந்த சாகுல்அமீது மகன் அல்கபீர் (31), தென்காசி மரைக்காயர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த அப்துல்கனி மகன் அப்துல்காதர் (31), அதே பகுதியை சேர்ந்த முகம்மது சாகிப் மகன் முகமது இஸ்மாயில் என்ற மேசாக் (30), நெல்லை மேலப்பாளையம் ஆமீன்புரம் 5-வது தெருவை சேர்ந்த மைதீன் மகன் செய்யது காஜா கரீம் நவாஸ் (38) ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது.
இதில் அல்கபீர் தென்காசியை பூர்வீகமாக கொண்டவர் ஆவார். இவர்களிடம் சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலையில் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரித்தனர். மேலும் பல்வேறு விவரங்களை திரட்டும் வகையில் துருவி, துருவி விசாரணை நடத்தினர். பின்னர் 5 பேர் மீதும் சட்டத்திற்கு விரோதமாக கூடி நாச வேலைகளில் ஈடுபட திட்டமிட்டதாக தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
இதையடுத்து 5 பேரையும் போலீசார் தென்காசி கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு பிரிவு வசம் ஒப்படைக்க உயர் போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர். மேலும், பிடிபட்ட 5 பேரிடமும் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
Related Tags :
Next Story