ராமநாதபுரத்தில் போலீஸ் நண்பர்கள் குழு பெயரில் மோசடி; வாலிபர் கைது


ராமநாதபுரத்தில் போலீஸ் நண்பர்கள் குழு பெயரில் மோசடி; வாலிபர் கைது
x
தினத்தந்தி 21 Jan 2020 4:15 AM IST (Updated: 21 Jan 2020 2:45 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் போலீஸ் நண்பர்கள் குழு பெயரில் மோசடியில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம், 

ராமநாதபுரம் பட்டணம்காத்தான் திருநகரை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் மகன் முனியசாமி (வயது 27). இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ராமநாதபுரம் போலீஸ் நண்பர்கள் குழுவில் இருந்தார். அப்போது அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதால் போலீஸ் நண்பர்கள் குழுவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டாராம். இந்த நிலையில் முனியசாமி தான் மீண்டும் போலீஸ் நண்பர்கள் குழுவில் சேர்ந்து விட்டதாக கூறி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்ற சான்று ஒன்றை காட்டி பள்ளிகளில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாராம்.

இதுதவிர தன்னை ஒரு காவல் அதிகாரி போன்று சித்தரித்துக்கொண்டு மாலை நேரங்களில் முக்கிய சாலைகளில் நின்று வாகன சோதனை செய்ததுடன், வாகன ஓட்டிகளின் ஆவணங்களை சரிபார்த்து, அவர்களை கண்டிப்பது போன்ற தகாத செயல்கள் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை என்ற சான்றினை தயாரித்து அதன் அடிப்படையில் வணிக வளாகங்கள், விற்பனை மையங்கள் உள்ளிட்டவைகளில் சோதனை நடத்தி வந்தாராம். போலீஸ் நண்பர்கள் குழு பெயரில் மோசடியில் ஈடுபட்டு வந்தது பற்றி தகவலறிந்த மாவட்ட போலீஸ் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் ராக்லண்ட் மதுரம், ராமநாதபுரம் கேணிக்கரை போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு, சப்-இன்ஸ்பெக்டர் முருகநாதன் ஆகியோர் மோசடி வழக்கு பதிவு செய்து முனியசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story