விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேரடி ஒளிபரப்பு: மோடியின் கலந்துரையாடல் நிகழ்ச்சியை கண்டுகளித்த மாணவர்கள்


விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேரடி ஒளிபரப்பு: மோடியின் கலந்துரையாடல் நிகழ்ச்சியை கண்டுகளித்த மாணவர்கள்
x
தினத்தந்தி 21 Jan 2020 4:30 AM IST (Updated: 21 Jan 2020 2:55 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட மோடியின் கலந்துரையாடல் நிகழ்ச்சியை பள்ளி மாணவர்கள் கண்டுகளித்தனர்.

விழுப்புரம்,

தமிழகத்தில் மாநில பள்ளிக்கல்வி பாடத்திட்டம் மற்றும் மத்திய அரசின் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டங்களில் 10-ம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதேபோல் ஒவ்வொரு மாநிலங்களிலும் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

இந்த தேர்வை மாணவர்கள் அச்சமின்றியும், பதற்றமின்றியும் எழுதும் வகையிலும், அவர்களுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தும் வகையிலும் டெல்லியில் நேற்று அனைத்து மாநில மாணவர்களுடன் பிரதமர் நரேந்திரமோடி கலந்துரையாடி பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். இதில் தமிழகத்தை சேர்ந்த மாணவ- மாணவிகள் பலரும் பங்கேற்றனர்.

சிறப்பு ஏற்பாடு

இந்நிகழ்ச்சி டி.வி. மற்றும் சமூகவலைத்தளங்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் இந்த உரையை கண்டுகளிக்க பள்ளி கல்வித்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 378 அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளிலும், 38 அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகளிலும், 135 தனியார் பள்ளிகளிலும் டி.வி. மூலம் பிரதமர் மோடியின் கந்துரையாடலை மாணவ- மாணவிகள் கண்டு களிக்க கல்வித்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். அந்த வகையில் விழுப்புரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட பல்வேறு பள்ளிகளில் பிரதமர் கலந்துறையாடல் நிகழ்ச்சியை மாணவ- மாணவிகள் டி.வி. மூலம் கண்டு களித்தனர்.

1½ லட்சம் பேர்

இதுபற்றி கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் டி.வி. மூலமாக பிரதமரின் கலந்துரையாடல் நிகழ்ச்சியை மாணவர்கள் நேரடியாக பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள மடிக்கணினி மூலமாகவும் பிரதமரின் கலந்துரையாடல் நிகழ்ச்சியை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதனை சுமார் 1½ லட்சம் மாணவ- மாணவிகள் பார்த்தனர் என்றார்.


Next Story