5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யாவிட்டால் போராட்டம் கி.வீரமணி பேச்சு


5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யாவிட்டால் போராட்டம் கி.வீரமணி பேச்சு
x
தினத்தந்தி 21 Jan 2020 11:00 PM GMT (Updated: 21 Jan 2020 8:57 PM GMT)

5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை ரத்து செய்யாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று கோவில்பட்டியில் நடந்த பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறினார்.

கோவில்பட்டி,

‘நீட்‘ தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் பிரசார பயண குழுவினர் நேற்று கன்னியாகுமரியில் இருந்து வேன் மூலம் பிரசார பயணத்தை தொடங்கினர். மாலையில் கோவில்பட்டி மெயின் ரோடு காமராஜர் சிலை முன்பு வந்த பிரசார பயண குழுவினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் கி.வீரமணி பேசியதாவது:-

‘நீட்‘ தேர்வை ரத்து செய்யும்வரை...

விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், பொருளாதார மந்தநிலை, ஏற்றுமதி சரிவு போன்றவற்றில் இருந்து மக்களை திசை திருப்புவதற்காகவே மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்றி உள்ளது.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி கொடுக்க கூடாது என்பதற்காகவே மத்திய பா.ஜ.க. அரசு ‘நீட்‘ தேர்வை அமல்படுத்தி உள்ளது. ‘நீட்‘ தேர்வு திணிப்பால் அனிதா, பிரதீபா, அமுதா போன்ற தாழ்த்தப்பட்ட மாணவிகளின் மருத்துவ கனவு சிதைந்து, அவர்களது வாழ்க்கையே துயரத்தில் முடிந்துள்ளது. இந்த அநீதியை ஒரு போதும் பொறுக்க முடியாது.

தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சிக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ளது. அதன் பின்னர் தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன் நீட் தேர்வும் காணாமல் போய் விடும். தமிழகத்தில் நடப்பது அம்மா ஆட்சி அல்ல, சும்மா ஆட்சி. திராவிடர் கழகம் எடுத்த காரியத்தில் இதுவரை தோற்றதாக வரலாறு இல்லை. ‘நீட்‘ தேர்வை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும். அதில் வெற்றியும் பெறுவோம்.

பொதுத்தேர்வு

5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது அக்கிரமம் ஆகும். இதனால் பள்ளிக்கு செல்லாமல் இடைநிற்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். அவர்களுக்கு எளிதான கேள்விகளையே கேட்பதாக, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகிறார். அவ்வாறெனில் யாரை திருப்திபடுத்த இந்த தேர்வுகளை நடத்த வேண்டும்?. மத்திய பா.ஜ.க. அரசை திருப்திபடுத்துவதற்காக இந்த தேர்வுகளை நடத்துகின்றீர்கள்?.

புதுச்சேரி மாநிலத்தில் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த மாட்டோம் என்று அறிவித்து உள்ளனர். அந்த துணிச்சல் தமிழகத்தில் ஆட்சி செய்யும் அ.தி.மு.க.வுக்கு இல்லை. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில் ஒத்த கருத்துடைய அமைப்புகளுடன் இணைந்து, மக்களை திரட்டி, திராவிடர் கழகம் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தும்.

இவ்வாறு வீரமணி பேசினார்.

மாநில பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன், மாவட்ட தலைவர் பெரியார் அடியான், பொதுக்குழு உறுப்பினர் தமிழரசி, மண்டல தலைவர் பால் ராசேந்திரம், மண்டல செயலாளர் வெற்றிவேந்தன், நகர தலைவர் நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story