மாவட்ட செய்திகள்

குழந்தை கடத்தல் வழக்கில் மேலும் ஒரு பெண் அதிரடி கைது கர்ப்பிணியாக நடித்து நாடகமாடியது பற்றி பரபரப்பு வாக்குமூலம் + "||" + One more woman arrested for child trafficking

குழந்தை கடத்தல் வழக்கில் மேலும் ஒரு பெண் அதிரடி கைது கர்ப்பிணியாக நடித்து நாடகமாடியது பற்றி பரபரப்பு வாக்குமூலம்

குழந்தை கடத்தல் வழக்கில் மேலும் ஒரு பெண் அதிரடி கைது கர்ப்பிணியாக நடித்து நாடகமாடியது பற்றி பரபரப்பு வாக்குமூலம்
சென்னையில் குழந்தை கடத்தப்பட்ட வழக்கில் போலீசார் நேற்று மேலும் ஒரு பெண்ணை அதிரடியாக கைது செய்தனர். குழந்தையை கடத்தியதாக முதலில் கைது செய்யப்பட்ட பெண், கர்ப்பிணியாக நடித்து தனது கணவரிடம் நாடகமாடியதாக பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
சென்னை,

மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜானிபோஸ்லே (வயது 21). இவரது மனைவி பெயர் ரத்திஷாபோஸ்லே (வயது 20). வறுமை காரணமாக இவர்கள் சென்னை மெரினாவில் தங்கி இருந்து பலூன் வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வந்தனர். இவர்களுக்கு 7 மாதத்தில் ஆண் குழந்தை ஒன்று இருந்தது. ஏழ்மையான நிலையிலும் இவர்கள் மெரினா பிளாட்பாரத்தில் இனிதாக வாழ்ந்து வந்தனர்.


இவர்களது இனிதான வாழ்க்கையில் கடந்த 12-ந் தேதி திடீரென்று புயல் வீசி விட்டது. இவர்களது ஆசையான ஆண் குழந்தை கடத்தப்பட்டது. இளம் பெண் ஒருவர் அன்றைய தினம் மாலை 3 மணி அளவில் இவர்களை சந்தித்து பேசினாள்.

சினிமாவில் நடிக்க வைக்க...

சினிமாவில் நடிக்க துணை நடிகர்-நடிகைகளை அழைத்து செல்லும் ஏஜெண்டாக தான் வேலை செய்வதாகவும், சினிமாவில் நடிக்க வைக்க ஆண் குழந்தை ஒன்று தேவைப்படுவதாகவும், உங்கள் குழந்தையை கொடுத்தால், தினமும் ரூ.2 ஆயிரம் வாடகையாக கிடைக்கும் என்றும் ஜானிபோஸ்லேவிடம் அந்த பெண் தெரிவித்தாள். பலூன் விற்பனையில் தினம் ரூ.100 கஷ்டப்பட்டு சம்பாதித்த நிலையில், தினம் ரூ.2 ஆயிரம் கிடைக்கும் என்றதால், தனது குழந்தையை சினிமாவில் நடிக்க வைக்க ஜான் போஸ்லே சம்மதம் தெரிவித்தார்.

குழந்தையை வாங்கிக்கொண்டு, குழந்தையின் பெற்றோருடன் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அந்த பெண் வந்தாள். குழந்தை ஆரோக்கியமாக இருந்தால்தான் சினிமாவில் நடிக்க வைக்க முடியும் என்றும், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தனக்கு தெரிந்த டாக்டரிடம் அதற்காக மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அந்த பெண் கூறினாள். மருத்துவ பரிசோதனை செய்ய குழந்தையை டாக்டர் ஒருவரிடம் காட்டிவிட்டு வருவதாக சென்ற அந்த பெண், குழந்தையை கடத்தி சென்றுவிட்டாள்.

8 தனிப்படை தேடுதல் வேட்டை

சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், குழந்தையை மீட்க 8 தனிப்படைகளை அமைத்து கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். கூடுதல் கமிஷனர் தினகரன், இணை கமிஷனர் கபில்குமார் சரத்கர், துணை கமிஷனர் ராஜேந்திரன் ஆகியோர் மேற்பார்வையில், பூக்கடை உதவி கமிஷனர் லட்சுமணன் தலைமையில் தனிப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

கண்காணிப்பு கேமரா காட்சிகள் உதவியுடன் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் வைத்து, நர்சு ஜூலியட் உதவியுடன் நேற்று முன்தினம் மாலை கடத்தப்பட்ட குழந்தையை தனிப்படை போலீசார் பத்திரமாக மீட்டனர்.

குழந்தையை கடத்திய பெண் ரேவதி (26) கைது செய்யப்பட்டார். குழுந்தையை கடத்துவதற்கு சதித்திட்டம் வகுத்து கொடுத்து உறுதுணையாக செயல்பட்டதாக, ரேவதியின் தாயார் ஜெயலட்சுமியும் (45) நேற்று தனிப்படை போலீசாரால் கைதானார்.

பரபரப்பு வாக்குமூலம்

குழந்தையை கடத்தியது ஏன்? என்பது குறித்து போலீசாரிடம் இளம்பெண் ரேவதி பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தாள். அதன் விவரம் வருமாறு:-

எனக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதனால் நான் படித்த நர்சிங் படிப்பை பாதியில் நிறுத்த வேண்டியதாயிற்று. எனது கணவர் இளங்கோவன் டெய்லராக வேலை செய்தார். எனது கணவருடன் அரக்கோணத்தில் வசித்து வந்தேன். எனக்கு 6 வயதில் ஒரு மகள் இருக்கிறாள்.

எனது கணவர் 2-வது ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்டார். இதற்கிடையில் 2 முறை கருத்தரித்து பாதியில் கரு கலைந்து விட்டது.

கர்ப்பிணி நாடகம்

4-வதாகவும் நான் கர்ப்பமானேன். எனது கணவர் ஆண் குழந்தை வேண்டும் என்று ஆசைப்பட்டதால், இந்த குழந்தை பெண்ணாக பிறந்தால் என்ன செய்வது? என்று பயந்தேன். அப்போது எனது தயார் ஜெயலட்சுமி ஒரு ஆலோசனை சொன்னார். தற்போதைய கருவை ரகசியமாக கலைத்து விட்டு, தொடர்ந்து கர்ப்பமாக இருப்பதுபோல நாடகமாடும் படியும், பிரசவத்துக்காக சென்னைக்கு எனது தாயார் வீட்டுக்கு வருவதுபோல வந்து, சென்னையில் பிறந்த ஆண் குழந்தை ஒன்றை விலைக்கு வாங்கி, நான் பெற்றெடுத்ததுபோல, எனது கணவரிடம் சொல்லி விடலாம் என்று எனது தாயார் திட்டம் வகுத்து கொடுத்தார். அந்த திட்டப்படி நானும் கருவை ரகசியமாக கலைத்து விட்டு, தொடர்ந்து கர்ப்பமாக இருப்பதுபோல நாடகமாடினேன். பின்னர் பிரசவத்துக்காக சென்னைக்கு வந்து மேற்கு மாம்பலத்தில் உள்ள எனது தாயார் வீட்டில் தங்கி இருந்தேன்.

கடத்தல் திட்டம்

சென்னையில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஆண் குழந்தையை யாராவது வளர்க்க முடியாமல் விற்றால் அதை விலைக்கு வாங்கும் முயற்சியில் ஈடுபட்டோம். ஆனால் அதுபோல் குழந்தை விலைக்கு கிடைக்கவில்லை.

என்ன செய்வது என்று தவித்தபோதுதான், மெரினாவில் பலூன் வியாபாரி, ஆண் குழந்தையுடன் இருப்பதை பார்த்தேன். எனக்கு இந்தி மொழி தெரியும் என்பதால், இந்தியில் அவர்களிடம் நைசாக பேசினேன். அவர்கள் வறுமையில் கஷ்டப்படுவது தெரிய வந்தது. எனது தாயார் சொன்ன ஆலோசனைபடி, சினிமாவில் நடிக்க குழந்தை வாடகைக்கு தேவைபடுவதாக சொல்லி, குழந்தையை கடத்தி வந்து விட்டேன்.

உடல் நிலை பாதிப்பு

ஆனால் தாய்ப்பால் குடித்து வந்த குழந்தை, புட்டிப்பாலை குடிக்க மறுத்தது. இதனால் குழந்தைக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது. உடல் நிலை பாதிக்கப்பட்டது. எனவே குழந்தையை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தேன். போலீஸ் கையில் சிக்காமல் இருக்க அந்த ஆஸ்பத்திரி எனக்கு பாதுகாப்பாகவும் இருந்தது.

ஆனால் நர்சு ஒருவர் சந்தேகத்துடன் என்னிடம் அடிக்கடி குழந்தை பற்றி விசாரிப்பார். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்காமல், ஏன் புட்டிப்பால் கொடுக்கிறாய்? என்று சந்தேகப்பட்ட அவர், போலீசில் போட்டு கொடுத்து என்னை மாட்டி விட்டார். எனது கணவரின் ஆண் குழந்தை ஆசையால் இந்த விபரீதத்தில் ஈடுபட்டு போலீஸ் வழக்கில் மாட்டிக்கொண்டேன். இவ்வாறு அவர் வாக்குமூலம் கொடுத்ததாக போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட ரேவதியும், அவரது தாயார் ஜெயலட்சுமியும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

கமிஷனர் பாராட்டு

மீட்கப்பட்ட குழந்தையை அதன் பெற்றோரிடம் முறைப்படி ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது. குழந்தையின் பெற்றோர் மற்றும் குழந்தையை மீட்ட தனிப்படை போலீசில் இடம் பெற்ற அதிகாரிகளும், குழந்தை பற்றி தகவல் கொடுத்த நர்ஸ் ஜூலியட் ஆகியோரும் வந்திருந்தனர்.

குழந்தையை முறைப்படி கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் அதன் தாயாரிடம் வழங்கினார். தாய் குழந்தையை ஆனந்த கண்ணீருடன் பெற்றுக்கொண்டு ஆசையாக முத்தமிட்டார். அந்த காட்சி கமிஷனர் உள்ளிட்ட அங்கிருந்த போலீஸ் அதிகாரிகள் அனைவர் கண்களிலும் ஆனந்த கண்ணீரை வரவழைத்து விட்டது. குழந்தையை மீட்டுக்கொடுத்த உங்களுக்கு பெரிய பரிசு கொடுக்க ஆசைதான், ஆனால் எங்களிடம் அதற்கு வசதி இல்லை என்று சொல்லி பாசி மாலை ஒன்றை குழந்தையின் பெற்றோர் போலீஸ் கமிஷனருக்கு பரிசாக கொடுத்தனர். கமிஷனரும் அதை அன்பாக பெற்றுக்கொண்டார். குழந்தையை மீட்ட தனிப்படை போலீசாருக்கு, கமிஷனர் பாராட்டு தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

1. பெருந்துறை அருகே பரபரப்பு: காதல் திருமணம் செய்த பெண் காரில் கடத்தல், பெற்றோருக்கு போலீஸ் வலைவீச்சு
பெருந்துறை அருகே காதல் திருமணம் செய்த பெண்ணை காரில் கடத்தியதாக அவருடைய பெற்றோரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
2. காரில் கடத்தப்பட்ட 2,500 மதுபாட்டில்கள் பறிமுதல் 2 பேர் கைது
மயிலாடுதுறை அருகே காரில் கடத்தப்பட்ட 2,500 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக 2 பேரை கைது செய்து உள்ளனர்.
3. புதுக்கோட்டை அருகே கீரனூரில் ரூ.200 கோடி மதிப்புள்ள பஞ்சலோக சிலைகள் பறிமுதல்
புதுக்கோட்டை அருகே கீரனூரில் விற்பதற்காக வைத்திருந்த சிவன், அம்மன், விநாயகர் உள்ளிட்ட ரூ.200 கோடி மதிப்புள்ள 5 பஞ்சலோக சாமி சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
4. கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு காரில் கஞ்சா கடத்த முயன்ற தாய்-மகன் உள்பட 9 பேர் கைது
கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு காரில் கஞ்சா கடத்த முயன்ற தாய்-மகன் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. பாகிஸ்தானில் தொடரும் அவலம்: இந்து பெண்ணை கடத்தி கட்டாய மத மாற்றம்
பாகிஸ்தானில் இந்து பெண் கடத்தப்பட்டு கட்டாய மத மாற்றம் செய்து, முஸ்லிம் இளைஞருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார்.