‘ஒருங்கிணைந்த கல்வியே இன்றைய தேவை’ ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேச்சு


‘ஒருங்கிணைந்த கல்வியே இன்றைய தேவை’ ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேச்சு
x
தினத்தந்தி 22 Jan 2020 4:30 AM IST (Updated: 22 Jan 2020 3:50 AM IST)
t-max-icont-min-icon

ஒருங்கிணைந்த கல்வியே இன்றைய தேவை என்று சென்னையில் நடந்த விழா ஒன்றில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசினார்.

தாம்பரம்,

மகா சுவாமிகள் என்றழைக்கப்படும் ஜெகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ‘தெய்வத்தின் குரல்’ நூலின் இந்தி பதிப்பான பரம் வாணி நூல் வெளியீட்டு விழா சென்னை சேலையூர் செம்பாக்கம் காஞ்சி மகாசுவாமி வித்யாமந்திர் பள்ளியில் நடைபெற்றது. காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நூலை வெளியிட, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பெற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் காஞ்சி மகாசுவாமியின் வாழ்க்கை வரலாறு மற்றும் தொண்டு பணிகள் குறித்து வைக்கப்பட்டுள்ள நிரந்தர ஓவிய கண்காட்சியையும் மோகன் பகவத் திறந்துவைத்தார். இதைத்தொடர்ந்து மோகன் பகவத் பேசியதாவது:-

மகாசுவாமி சனாதன தர்மத்திற்கு வழிகாட்டியாக திகழ்ந்தார். தனது வாழ்க்கை மூலம் பலருக்கு வழிகாட்டினார். கடவுளை பார்த்திருக்கிறீர்களா என சுவாமி விவேகானந்தர் கேட்டபோது, இப்போது உன்னை காண்பது போல கடவுளை காண்கிறேன் என்று சொன்னார். ஆன்மிக உண்மைகளை உணர்ந்த பிறகு, பலமுறை ஆராய்ந்து பாருங்கள். பின்னர் அதில் இருந்து விலகாமல் இருங்கள்.

ஒருங்கிணைந்த கல்வி

ஆன்மிகமே இந்தியாவின் ஆன்மா. தர்மமே நம்மை இறைவனை நோக்கி அழைத்து செல்கிறது. நவீன கல்விமுறையுடன் சேர்ந்த ஆன்மிக கல்வியே ஒருங்கிணைந்த கல்வி முறையாகும். இன்றைய சூழலில் இப்படிப்பட்ட ஒருங்கிணைந்த கல்வியே மிகவும் அவசியம். இதன் மூலமே உடல், மனம், கல்வி அனைத்தையும் மாணவர்களுக்கு அளிக்க முடியும்.

ஒருங்கிணைந்த கல்வியை அளிக்கும் இந்த கல்வி நிறுவனத்திற்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை. இந்த உலகில் அனைத்துமே முன்னேறி வருகிறது. முன்னேற்றம் என்பது இயற்கையை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், கனரா வங்கி நிர்வாக அதிகாரி சங்கர நாராயணன், ஸ்ரீகாஞ்சி மகாசுவாமி அறக்கட்டளையின் அறங்காவலர்கள் மேத்தா, பாம்பே சங்கர், இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன், பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story