வேன் டிரைவரை கொன்ற 2 பேருக்கு ஆயுள் தண்டனை - தூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பு


வேன் டிரைவரை கொன்ற 2 பேருக்கு ஆயுள் தண்டனை - தூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 23 Jan 2020 4:00 AM IST (Updated: 22 Jan 2020 11:16 PM IST)
t-max-icont-min-icon

வேன் டிரைவரை கத்தியால் குத்திக்கொன்ற வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி அண்ணாநகர் 11-வது தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகச்சாமி மகன் பாலமுருகன் (வயது 31). வேன் டிரைவர். இவருக்கும், அங்குள்ள கே.வி.கே. நகரைச் சேர்ந்த முனீசுவரி என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக முனீசுவரி, பாலமுருகனை பிரிந்து சென்று விட்டார். இதனால் முனீசுவரியின் அண்ணன் முனியசாமி என்ற பொன்முனியசாமி (27) ஆத்திரம் அடைந்தார். அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து பாலமுருகனை கொலை செய்ய திட்டம் தீட்டினார்.

கடந்த 27-10-2013 அன்று தூத்துக்குடி புதிய பஸ்நிலையத்தில் உள்ள ஒரு கடையில் பாலமுருகன் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த பொன்முனியசாமி, அவரது நண்பர்களான மணிகண்டன் (27), கே.வி.கே.நகரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (32), சண்முகராஜ் என்ற அர்ச்சுணன் (32), ராமலிங்கம், கண்ணன் ஆகிய 6 பேரும் சேர்ந்து, பாலமுருகனை கத்தியால் சரமாரியாக குத்தினர். இதில் பலத்த காயம் அடைந்த பாலமுருகனை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கவுதமன் குற்றம் சாட்டப்பட்ட பொன்முனியசாமி, மணிகண்டன் ஆகிய 2 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.1,000 அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். மற்ற 4 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கோமதி மணிகண்டன் ஆஜர் ஆனார்.

Next Story