சிறுமி பாலியல் பலாத்காரம்; மீனவருக்கு 10 ஆண்டு சிறை - காரைக்கால் கோர்ட்டு தீர்ப்பு


சிறுமி பாலியல் பலாத்காரம்; மீனவருக்கு 10 ஆண்டு சிறை - காரைக்கால் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 23 Jan 2020 4:00 AM IST (Updated: 23 Jan 2020 1:19 AM IST)
t-max-icont-min-icon

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மீனவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து காரைக்கால் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

காரைக்கால், 

காரைக்கால் கருக்களாச்சேரி மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 43), மீனவர். கடந்த 24.4.18 அன்று ஆறுமுகம் தனது வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அந்த பகுதியில் சிறுமிகள் விளையாடிக்கொண்டிருந்தனர். அதில் 11 வயது சிறுமி ஒளிந்து விளையாடுவதற்காக ஆறுமுகம் வீட்டிற்கு சென்றாள்.

உடனே அவர் அந்த சிறுமியின் வாயை பொத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் மற்றொரு சிறுமியை கையை பிடித்து இழுத்ததாகவும் கூறப்படுகிறது. இதைப் பார்த்த மற்ற சிறுமிகள் கதறி அழுததால் ஆறுமுகம் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமிகள் தனது பெற்றோரிடம் கூறி அழுதனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மற்றும் கிராம பஞ்சாயத்தார் நிரவி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மரிகிறிஸ்டியன் பால், சப்-இன்ஸ்பெக்டர் ஜெரோம் மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ஆறுமுகத்தை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை காரைக்கால் மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கின் இறுதி கட்ட விசாரணையில் ஆறுமுகம் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டது. சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக ஆறுமுகத்துக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், மற்றொரு சிறுமியை தவறான நோக்கத்தில் கையை பிடித்து இழுத்த குற்றத்திற்காக 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. 

இந்த தண்டனைகளை குற்றவாளி ஆறுமுகம் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும். மேலும் ரூ.20 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.5 லட்சம் வழங்கவேண்டும் என்றும் மாவட்ட நீதிபதி கார்த்திகேயன் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

Next Story