எண்ணேகொல் தடுப்பணையில் புதிய கால்வாய் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை


எண்ணேகொல் தடுப்பணையில் புதிய கால்வாய் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை
x
தினத்தந்தி 22 Jan 2020 10:15 PM GMT (Updated: 22 Jan 2020 9:48 PM GMT)

எண்ணேகொல் தடுப்பணையில் இருந்து புதிய கால்வாய் அமைக்கும் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

கிரு‌‌ஷ்ணகிரி,

தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சென்னைய நாயுடு, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாரசந்திரம் தடுப்பணையில் இருந்து படேதலாவ் ஏரிக்கு மழைக் காலங்களில் தண்ணீர் வந்து, ஏரி நிறைய தண்ணீர் இருந்தது.

அதை நம்பி பர்கூர் ஒன்றியத்தை சேர்ந்த விவசாயிகள், படேதலாவ் ஏரிக்கு கிழக்கே உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் சென்றடையும் வகையில் புதிய கால்வாய் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையினை ஏற்று 2005-ம் ஆண்டு படேதலாவ் ஏரி முதல் காட்டாகரம் ஏரி வரை 11 ஏரிகளை இணைக்கும் வகையில் புதிய கால்வாய் அமைக்கும் பணி தொடங்கி, 2009-ம் ஆண்டு பணி முடிக்கப்பட்டது. ஆனால், படேதலாவ் ஏரிக்கு தண்ணீர் வர வழியில்லாததால் ஏரி வறண்டு காணப்படுகிறது.

விரைந்து முடிக்க வேண்டும்

இந்தநிலையில், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே எண்ணேகொல் தடுப்பணையில் இருந்து படேதலாவ் ஏரிக்கும், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தும்பலஅள்ளி அணைக்கும் பல ஏரிகளை இணைக்கும் வகையில் புதிய கால்வாய் அமைத்து தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

அதனை ஏற்று, கடந்த 2017-ம் ஆண்டு கிரு‌‌ஷ்ணகிரியில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் இந்த திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த திட்டப்பணிகள் இதுவரை நடைபெறவில்லை. எனவே, இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்தி, இரண்டு பிரதான கால்வாய்களையும் அமைத்து தர வேண்டும் என விவசாயிகள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story