குடியரசு தினவிழாவையொட்டி சோதனைச்சாவடியில் துப்பாக்கியுடன் போலீசார் தீவிர கண்காணிப்பு


குடியரசு தினவிழாவையொட்டி சோதனைச்சாவடியில் துப்பாக்கியுடன் போலீசார் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 22 Jan 2020 11:00 PM GMT (Updated: 22 Jan 2020 10:09 PM GMT)

குடியரசு தினவிழாவையொட்டி சிறுபாக்கம் சோதனைச்சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சிறுபாக்கம்,

நாடு முழுவதும் வருகிற 26-ந்தேதி குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்த நிலையில், குடியரசு தினவிழாவில் பயங்கரவாதிகள் நாசவேலையில் ஈடுபட இருப்பதாக வெளியான தகவலை தொடர்ந்து நாடுமுழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக தமிழகத்தில் கடந்த 8-ந்தேதி குமரி மாவட்டத்தில் களியக்காவிளை சோதனை சாவடியில்ல் பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் பயங்கரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே தமிழக பகுதியிலும் வழக்கத்தை விட இந்த முறை போலீசார் கூடுதல் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், கடலூர் மாவட்டத்தில் சிறுபாக்கம் வனப்பகுதிகளை கொண்டதாகும். சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட பகுதிகளில் இருந்து இதன் வழியாக தான் கடலூர் மாவட்டத்துக்கு வாகனங்கள் வர முடியும். எனவே சேலம்-கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் சிறுபாக்கத்தில் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள சோதனை சாவடி மையத்தில் போலீசார் கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

தீவிர கண்காணிப்பு

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் உத்தரவின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் 15-க்கும் மேற்பட்ட போலீசார் 2 குழுக்களாக 24 மணிநேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள். சோதனைச்சாவடியில் மணல் மூட்டைகளை கொண்டு சாலையின் இருபகுதியிலும் அடுக்கி வைத்தபடி, துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளார்கள்.

இவர்கள் அந்த வழியாக வரும் வாகனங்களை நிறுத்தி, தீவிர சோதனை செய்தே பின்னரே அங்கிருந்து அனுப்பி வைத்து வருகின்றனர். முன் எப்போதும் இல்லாத வகையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் சிறுபாக்கம் சோதனை சாவடியில் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story