ஊராட்சி தலைவராக பணியாற்றி உயர்ந்தவர்: எடப்பாடி பழனிசாமியின் மக்கள் பணியை பின்பற்ற வேண்டும் அமைச்சர் பேச்சு


ஊராட்சி தலைவராக பணியாற்றி உயர்ந்தவர்: எடப்பாடி பழனிசாமியின் மக்கள் பணியை பின்பற்ற வேண்டும் அமைச்சர் பேச்சு
x
தினத்தந்தி 22 Jan 2020 11:00 PM GMT (Updated: 22 Jan 2020 10:21 PM GMT)

ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றி முதல்வராக உயர்ந்த எடப்பாடிபழனிசாமியின் மக்கள் பணியை பின்பற்ற வேண்டும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

மதுரை,

மதுரை மாவட்ட ஊரக மற்றும் உள்ளாட்சி துறை சார்பில் திருமங்கலம், கல்லுப்பட்டி, கள்ளிக்குடி, உசிலம்பட்டி, சேடபட்டி, செல்லம்பட்டி, திருப்பரங்குன்றம் ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்களுக்கான பயிற்சி முகாம் நேற்று நடந்தது. கூடுதல் கலெக்டர் பிரியங்கா தலைமை தாங்கினார். மாவட்ட பஞ்சாயத்து உதவி இயக்குனர் செல்லத்துரை முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கி பேசினார். அவர் பேசும் போது கூறியதாவது:-

236 பெண் ஊராட்சி தலைவர்கள்

ஊராட்சி மன்ற தலைவருக்கு பல்வேறு அதிகாரங்கள் உள்ளன. மத்திய, மாநில அரசின் திட்டங்கள் உங்கள் மூலம் தான் மக்களுக்கு சென்றடைகின்றன. எனவே அந்த திட்டங்கள் பற்றி நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். மதுரை மாவட்டத்தில் 420 ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அதில் 236 பெண்கள் ஊராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். உங்களுக்கு வாக்கு அளித்திருந்தாலும், அளிக்காவிட்டாலும் பாரபட்சம் பார்க்காமல் மக்கள் பணியாற்றி ஏன் இவரை ஒதுக்கி விட்டோம் என்று அவர்கள் மனதில் பதியும்படி உழைத்திட வேண்டும்.

சேலம் மாவட்டத்தில் உங்களைப் போன்று ஊராட்சி மன்ற தலைவராக மக்களுக்கு பணியாற்றி படிப்படியாக உழைத்து இன்றைக்கு முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி உயர்ந்துள்ளார். அவரின் மக்கள் சேவைகளை நீங்கள் பின்பற்றினால் போதும். எத்தனை முறை தேர்தல் வந்தாலும் நீங்கள் தான் ஊராட்சி தலைவராக இருப்பீர்கள். அன்றாடம் நீங்கள் மக்களை சந்திக்கும் பொழுது பல்வேறு கோரிக்கைகள் உங்களிடம் அளிப்பார்கள். எந்த கோரிக்கை ஆனாலும் அதை முதல்-அமைச்சர் மற்றும் துணை முதல்-அமைச்சரின் கவனத்திற்கு எடுத்து சென்று நிச்சயம் நான் நிறைவேற்றி தருவேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் அய்யப்பன், ஒன்றிய செயலாளர் அன்பழகன், மகாலிங்கம், முன்னாள் சேர்மன் தமிழழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story