குடியரசு தினத்தையொட்டி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 800 போலீசார் - அதிகாரிகள் தகவல்


குடியரசு தினத்தையொட்டி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 800 போலீசார் - அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 24 Jan 2020 3:45 AM IST (Updated: 24 Jan 2020 12:18 AM IST)
t-max-icont-min-icon

குடியரசு தினத்தையொட்டி வேலூர் மாவட்டம் முழுவதும் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர், 

நாடு முழுவதும் 26-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விமான நிலையம், ரெயில் நிலையம், முக்கிய கோவில்கள், சுற்றுலா தலங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்கும் பொருட்டு போலீசார் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, வேலூர் மாவட்டம் முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஜயக்குமார் மேற்பார்வையில் 5 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட 800 போலீசார் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குறிப்பாக பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையங்கள், மார்க்கெட், வணிகவளாகங்கள், வழிபாட்டு தலங்கள் மறறும் நகரின் முக்கிய பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களை மாவட்ட எல்லைப்பகுதிகளான காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை, குடியாத்தம் ஆகிய பகுதிகளில் நிறுத்தி சோதனை செய்து வருகிறார்கள்.

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர், ஸ்ரீபுரம் தங்ககோவில், விரிஞ்சிபுரம் மார்க்கப்பந்தீஸ்வரர் ஆகிய கோவில்களுக்கு வரும் பக்தர்களின் உடைமைகள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்யப்படுகிறது. மேலும் இந்த கோவில்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வேலூர் கன்டோன்மென்ட், காட்பாடி ஆகிய ரெயில் நிலையங்களில் பயணிகளின் உடைமைகள் மெட்டல் டிடெக்டர் கருவி கொண்டு சோதனை செய்யப்பட்டு, அதன் பின்னரே அவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த பணிகளில் ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் ஈடுபட்டுள்ளனர்.

மாநில எல்லையோர பகுதிகள் மற்றும் சோதனை சாவடிகளில் போலீசார் உஷார் நிலையில் இருக்கவும், முக்கிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த பாதுகாப்பு பணிகள் 27-ந் தேதி (திங்கட்கிழமை) காலை வரை தொடரும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story