உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற ஊராட்சி தலைவர்களுக்கு பயிற்சி அமைச்சர் ஓ.எஸ். மணியன் தொடங்கி வைத்தார்


உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற ஊராட்சி தலைவர்களுக்கு பயிற்சி அமைச்சர் ஓ.எஸ். மணியன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 24 Jan 2020 4:30 AM IST (Updated: 24 Jan 2020 12:32 AM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற ஊராட்சி தலைவர்கள், துணைத்தலைவர்களுக்கு பயிற்சி நடைபெற்றது. பயிற்சியை அமைச்சர் ஓ.எஸ். மணியன் தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம்,

நாகையை அடுத்த புத்தூர் அண்ணாசிலை அருகில் உள்ள புனித ஆரோக்கிய மாதா திருமண மண்டபத்தில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஊராட்சி துணைத்தலைவர்களுக்கு பயிற்சி நடைபெற்றது. பயிற்சிக்கு மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர் தலைமை தாங்கினார். பயிற்சியை அமைச்சர் ஓ.எஸ். மணியன் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஊராட்சி துணைத்தலைவர்கள் சேவை மனப்பான்மையுடன் இனம், மொழி, மதம் உள்ளிட்ட பல்வேறு வேற்றுமைகளை நீக்கி கடமை ஆற்ற வேண்டும். நேர்மையான அர்பணிப்பு எண்ணத்துடன் செயல்பட வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டப்பணிகளால் அனைத்து கிராம மக்கள் பயன் அடைவதை உறுதி செய்திட வேண்டும். ஊராட்சி தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்கள் ஒவ்வொரு மாதமும் கூட்டம் நடத்தி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து விவாதிக்க வேண்டும்.

கிராம சபை கூட்டம்

இதேபோல் கிராம சபை கூட்டத்திலும் கிராமத்திற்கு தேவையான வளர்ச்சி திட்டங்கள் குறித்து உரிய அலுவலரிடம் அணுகி மக்களுக்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை பெற்றுத்தர வேண்டும். ஊராட்சி பகுதிகளின் வளர்ச்சி என்பது மிகவும் இன்றியமையாதது என கருதி உணர்வு பூர்வமாக செய்கின்ற பணியானது வெற்றியை தரும். ஏழைகளின் குடும்ப வறுமையை ஒழித்திடும் வகையில் ஊராட்சி நிர்வாகத்தை திறம்பட செயல்படுத்துவதுடன் உள்ளூர் வேலைவாய்ப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மேலும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை பணிகளில் தொய்வு ஏதும் இல்லாமல் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் கூடுதல் கலெக்டர் பிரசாந்த், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) ராஜசேகரன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் கணேசன், நாகை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் உமாமகேஸ்வரி, நாகை மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் தங்க.கதிரவன் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Next Story