இலங்கைக்கு கடத்த பதுக்கிய 325 கிலோ கடல் அட்டை பறிமுதல் - தூத்துக்குடியில் வாலிபர் கைது


இலங்கைக்கு கடத்த பதுக்கிய 325 கிலோ கடல் அட்டை பறிமுதல் - தூத்துக்குடியில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 24 Jan 2020 4:00 AM IST (Updated: 24 Jan 2020 1:47 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த பதுக்கிய 325 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக வாலிபரை வனத்துறையினர் கைது செய்தனர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் இருந்து வெளிநாடுகளுக்கு கடல் அட்டைகள் கடத்தப்பட்டு வருவதாக பல்வேறு புகார்கள் வந்தன. இதனால் கடலோர பாதுகாப்பு போலீசார் மற்றும் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் திரேஸ்புரம் கடற்கரையில் 250 கிலோ கடல் அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக வனத்துறையினர் மீன்பிடி துறைமுகம் அருகே மறைந்து இருந்து கண்காணித்தனர். அப்போது அங்கு ஸ்கூட்டரில் ஒருவர் வந்தார். அவர் ஸ்கூட்டரின் முன்பகுதியில் ஒரு டப்பாவில் கடல் அட்டைகளை வைத்து இருந்தார். உடனடியாக வனத்துறையினர் அந்த நபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தை சேர்ந்த சேக்மைதீன் (வயது 28) என்பது தெரியவந்தது. அவர் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடல் அட்டைகளை சேகரித்து பதப்படுத்துவதற்காக கொண்டு சென்றது தெரியவந்தது. உடனடியாக அவரிடம் இருந்த 125 கிலோ கடல் அட்டையை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் கொடுத்த தகவலின்பேரில் லூர்தம்மாள்புரத்தில் உள்ள ஒரு வீட்டின் அருகில் குடிசையில் சோதனை நடத்தினர். அங்கு பதப்படுத்தப்பட்ட நிலையில் 200 கிலோ கடல் அட்டைகள் இருந்தன. அதனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சில இடங்களிலும் வனத்துறையினர் இரவு முழுவதும் சோதனை நடத்தினர். ஆனால், அங்கு எந்தவித கடல் அட்டையும் கிடைக்கவில்லை.

இரவு முழுவதும் வனத்துறையினர் நடத்திய சோதனையில் மொத்தம் 325 கிலோ கடல் அட்டையை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு பல லட்சம் ரூபாய் என்று கூறப்படுகிறது. இந்த அட்டைகள் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக வனத்துறையினர் மேல்விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story