தர்மபுரி மாவட்ட நிர்வாகத்தின் தொடர் முயற்சியால் சாலை விபத்துகள், உயிரிழப்புகள்குறைந்துள்ளன அமைச்சர் பேச்சு


தர்மபுரி மாவட்ட நிர்வாகத்தின் தொடர் முயற்சியால் சாலை விபத்துகள், உயிரிழப்புகள்குறைந்துள்ளன அமைச்சர் பேச்சு
x
தினத்தந்தி 23 Jan 2020 11:00 PM GMT (Updated: 23 Jan 2020 9:33 PM GMT)

தர்மபுரி மாவட்ட நிர்வாகத்தின் தொடர் முயற்சியால் சாலை விபத்துகள், உயிரிழப்புகள் குறைந்துள்ளன என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

நல்லம்பள்ளி,

சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், நல்லம்பள்ளியை அடுத்த பாளையம் சுங்கச்சாவடியில் வாகன ஓட்டுனர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் மலர்விழி, போலீஸ் சூப்பிரண்டு ராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர். இந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு, இலவச கண் பரிசோதனை முகாமை தொடங்கி வைத்து, வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

ஜெயலலிதாவிற்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி நடத்திவரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசால், விபத்துகளை தடுக்கவும், உயிரிழப்பில் இருந்து வாகன ஓட்டிகளை மீட்டிடும் வகையில், மாநிலம் முழுவதும் தார்சாலைகள் விரிவுபடுத்தப்பட்டு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தர்மபுரி மாவட்டத்தை பொருத்தவரையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறையின் தொடர் முயற்சியால், விபத்து சாலைகள் மற்றும் குறுகிய சாலைகள் கண்டறியப்பட்டு, சம்பந்தப்பட்ட சாலைகளை மேம்படுத்தியும், விரிவுபடுத்தியும் சாலை விபத்துகள் மற்றும் வாகன ஓட்டிகள் உயிரிழப்புகள் குறைக்கப்பட்டுள்ளன.

தவிர்க்க வேண்டும்

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 2018-ம் ஆண்டு 1,447 சாலை விபத்துகளில் 204 பேரும், 2019-ம் ஆண்டு 1,236 சாலை விபத்துகளில் 167 பேரும் உயிரிழந்துள்ளனர். மாவட்ட நிர்வாகத்தின் தொடர் முயற்சியால் 2019-ம் ஆண்டு சாலை விபத்துகள் 14.6 சதவீதமும், சாலை விபத்தில் ஏற்படும் உயிரிழப்புகள் 18 சதவீதமும் குறைந்துள்ளது.

வாகன ஓட்டுனர்கள் வாகனத்தை இயக்கும்போது சாலை போக்குவரத்து விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். வாகனங்களை ஓட்டும்போது செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி பெரியசாமி, கூட்டுறவு வங்கி தலைவர்கள் சிவப்பிரகா‌‌ஷ், சிவசக்தி, அம்மாசி உள்ளிட்ட உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story