சிவகாசி அருகே, பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வழக்கில் அசாம் வாலிபர் கைது
சிவகாசி அருகே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் அசாம் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சிவகாசி,
சிவகாசி அருகே கூலி தொழிலாளி ஒருவரின் 8 வயது மகள் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அதே பகுதியில் உள்ள சாக்குப்பை தயாரிக்கும் ஆலையில் பணியாற்றி வந்த அசாம் மாநிலம் நல்பேரி மாவட்டத்தை சேர்ந்த அக்பர்அலி மகன் மோஜம்அலி (வயது 20) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். இவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் மேலும் 5 பேருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களை போலீசார் தேடிவருகின்றனர். இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் நீதிபதி பரிமளா முன்பு மோஜம் அலியை போலீசார் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி அடுத்த மாதம் 6-ந் தேதி வரை வாலிபரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதற்கிடையில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் சலவையாளர்கள் சங்க நிர்வாகிகள் 20-க்கும் மேற்பட்டவர்கள் சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்தில் முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் கைது செய்யப்பட்ட மோஜம்அலியை தூக்கில்போட வேண்டும். அவருக்கு மரண தண்டனை பெற்று தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அப்போது சட்டம் உரிய தண்டனை கொடுக்கும் என்று போலீசார் கூறி அவர்களை சமரசம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். பின்னர் தமிழ்நாடு சலவைதொழிலாளர் கூட்டமைப்பினர் மாவட்ட கலெக்டர் கண்ணனை சந்தித்து, சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யவேண்டும். சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்து மாநில செயலாளர் அய்யனார் தலைமையில் மனு கொடுத்தனர்.
Related Tags :
Next Story