வேட்டவலத்தில் விவசாயிகள் சாலை மறியல் - நெல் மூட்டைகளை எடைபோட கோரி நடந்தது
வேட்டவலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல்மூட்டைகளை எடைபோடக்கோரி விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
வேட்டவலம்,
வேட்டவலம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் வேட்டவலம் ஒழுங்குமுறை விற்பனைகூடத்துக்கு விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக தினமும் சுமார் 4 ஆயிரம் மூட்டைகள் அளவிற்கு நெல் வரத்து இருந்தது. இந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை என்பதாலும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதாலும் அதிகப்படியான நெல் வியாழக்கிழமை இரவு முதலே வரத்தொடங்கியது.
அவ்வாறு வந்த நெல் மூட்டைகளை இறக்கி வைப்பதற்கு இடம் இல்லாததால் அருகிலுள்ள தனியார் நிலத்தை சீர் செய்து இடம் வழங்கப்பட்டது. அதில் நெல் மூட்டைகளை அடுக்கிவைத்து, விவசாயிகள் இரவில் பனியிலும், கொசுக்கடியிலும் நெல்மூட்டைகளை பாதுகாத்து வந்தனர்.
இந்த நிலையில் அளவுக்கு அதிகமான நெல் மூட்டைகள் குவிந்ததால் அதை நேற்று எடை போட முடியாது என மூட்டை தூக்குபவர்கள் கூறியதாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த விவசாயிகள் இன்னும் எத்தனை நாளுக்கு நாங்கள் காத்திருக்க முடியும். எனவே நாங்கள் கொண்டுவந்த நெல் மூட்டைகளை எடைபோட்டு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் எனக்கூறினர்.
மேலும் கோரிக்கையை வலியுறுத்தி வேட்டவலம்-விழுப்புரம் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்ததும் வேட்டவலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் தனசேகர், கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விவசாயிகளிடம் பேசி உடனடியாக சாலை மறியலை கைவிட செய்தனர்.
அதன் பிறகு ஒழுங்குமுறை விற்பனை கூட மேற்பார்வையாளர் (பொறுப்பு) குருமூர்த்தியிடம் பேசி இன்றே நெல் மூட்டைகளை எடைபோட்டு எடுத்து விலை நிர்ணயம் செய்ய வேண்டுமென்ற விவசாயிகளின் கோரிக்கையை போலீசார் தெளிவுபடுத்தினார். அதன் பிறகு அதிகாரிகள் உடனடியாக நெல் மூட்டைகளை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு எடுத்துக்கொள்வதாக கூறினர். இந்த மறியல் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story