புதுக்கடை அருகே பரிதாபம்: போலீஸ் ஏட்டு தற்கொலை


புதுக்கடை அருகே பரிதாபம்: போலீஸ் ஏட்டு தற்கொலை
x
தினத்தந்தி 25 Jan 2020 4:30 AM IST (Updated: 24 Jan 2020 10:45 PM IST)
t-max-icont-min-icon

புதுக்கடை அருகே ஆயுதப்படை போலீஸ் ஏட்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

புதுக்கடை, 

குமரி மாவட்டம் புதுக்கடை அருகே காப்புக்காடு கள்ளியோடு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமணி (வயது 38). இவர் நாகர்கோவிலில் உள்ள ஆயுதப்படையில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவருக்கு லீனா (36) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

கிருஷ்ணமணி உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்தார். அப்படி இருந்தும் அவரது உடல்நிலை குணமாகவில்லையாம். உடல்நலம் பாதிக்கப்பட்டதால் கிருஷ்ணமணி 5 நாட்கள் விடுப்பு எடுத்து இருந்தார்.

இதற்கிடையே நேற்று முன்தினம் மாலையில் கிருஷ்ணமணியின் மனைவி லீனா, பள்ளிக்கூடத்துக்கு சென்ற மகள்களை அழைத்து வருவதற்காக சென்றார். அவர் வீடு திரும்பிய போது கிருஷ்ணமணியை காணவில்லை. வெளியே சென்று இருக்கலாம் என்று தனது வழக்கமான பணிகளை செய்ய தொடங்கினார். இரவு வரை கிருஷ்ணமணி வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த லீனா, தன்னுடைய கணவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். கண்டுபிடிக்க முடியவில்லை. இதுதொடர்பாக புதுக்கடை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசாரும் கிருஷ்ணமணியை தேடி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை உறவினர் தேடிய போது, அப்பகுதியில் உள்ள ஒரு வாழை தோட்டத்தில் கிருஷ்ணமணி விஷம் குடித்து இறந்த நிலையில் கிடந்தார். தகவல் அறிந்த புதுக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் விரைந்து சென்று கிருஷ்ணமணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


இதுகுறித்து நடத்திய விசாரணையில், உடல்நலம் பாதிக்கப்பட்ட கிருஷ்ணமணி, கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டதும், உடல்நலம் சரியாகவில்லையே என மன வருத்தத்தில் இருந்ததும் தெரிய வந்துள்ளது. இதனால்தான் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் மேல்விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story