வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக 2 பேரிடம் ரூ.10 லட்சம் மோசடி - 2 பேர் மீது வழக்கு


வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக 2 பேரிடம் ரூ.10 லட்சம் மோசடி - 2 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 25 Jan 2020 4:00 AM IST (Updated: 25 Jan 2020 12:10 AM IST)
t-max-icont-min-icon

அன்னவாசல் அருகே வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகக்கூறி 2 பேரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அன்னவாசல், 

புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூர் அருகே உள்ள காவேரிநகரை சேர்ந்தவர் நல்லையா (வயது 55). இவர் தனது மகனுக்கு, வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதற்காக நாமக்கல் மாவட்டம் கன்னுரப்பட்டியை சேர்ந்த சத்தீஸ்வரன், ஆவுடையார்கோவில் பொன்பேத்தியை சேர்ந்த முத்தமிழ்செல்வன் ஆகிய 2 பேரிடம் ரூ.5 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் பணத்தை பெற்றுக்கொண்ட சத்தீஸ்வரன், முத்தமிழ்செல்வன் ஆகியோர் பல மாதங்கள் ஆகியும், வெளிநாட்டில் வேலை வாங்கி தரவில்லை.

இதனால் வேலைக்காக வழங்கிய பணத்தை நல்லையா திருப்பி கேட்டுள்ளார். ஆனால் சத்தீஸ்வரன், முத்தமிழ்செல்வன் ஆகியோர் பணத்தை திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். இது குறித்து நல்லையா கொடுத்த புகாரின் பேரில் சத்தீஸ்வரன், முத்தமிழ்செல்வன் ஆகியோர் மீது வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் பட்டுக்கோட்டை அருகே உள்ள திருச்சிற்றம்பலம் பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம்(58) என்பவரிடம், அவரது மகனுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகக்கூறி சத்தீஸ்வரன், முத்தமிழ்செல்வன் ஆகியோர் ரூ.5 லட்சத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பன்னீர்செல்வம் கொடுத்த புகாரின் பேரில் வெள்ளனூர் போலீசார் சத்தீஸ்வரன், முத்தமிழ்செல்வன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story