வாலிபர் இறந்த சோகத்தில் தாய் தற்கொலை - தீக்குளித்து உயிரை மாய்த்தார்


வாலிபர் இறந்த சோகத்தில் தாய் தற்கொலை - தீக்குளித்து உயிரை மாய்த்தார்
x
தினத்தந்தி 25 Jan 2020 4:00 AM IST (Updated: 25 Jan 2020 1:01 AM IST)
t-max-icont-min-icon

மதகடிப்பட்டில் வாலிபர் இறந்த சோகத்தில் தாய் தீக்குளித்து தனது உயிரை மாய்த்துக்கொண்டார்.

திருபுவனை, 

புதுவை மாநிலம் மதகடிப்பட்டு - திருக்கனூர் சாலையை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி செண்பகவள்ளி (வயது 64). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடராஜன் இறந்துவிட்டார். இவர்களது மூத்தமகன் தில்லைவளவன் தனியாக வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறார். இதனால் செண்பகவள்ளி தனது இளைய மகன் மணிகண்டன் (30) என்பவருடன் வசித்து வந்தார்.

இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் மணிகண்டன் இறந்துபோனார். இதனால் செண்பகவள்ளி சோகமடைந்தார்.

பொங்கல் பண்டிகை அன்று வீட்டில் இருந்த மணிகண்டனின் உருவ படத்தை பார்த்து செண்பகவள்ளி கண்ணீர்விட்டு கதறி அழுதார். மகனின் நினைவாக இருந்த அவர், திடீரென்று வீட்டில் இருந்த மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடல் முழுவதும் தீ பரவியதில் வலியால் அலறி துடித்தார்.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். செண்பகவள்ளி உடலில் பிடித்து எரிந்த தீயை அணைத்தனர். உடனே அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் செண்பகவள்ளி இறந்துபோனார்.

இது குறித்து மூத்தமகன் தில்லைவளவன் அளித்த புகாரின்பேரில் திருபுவனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அஜய்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

வாலிபர் இறந்த சோகத்தில் தாய் தீக்குளித்து உயிரை மாய்த்த சம்பவம் மதகடிப்பட்டு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story