மண்டியா அருகே 2 பிள்ளைகளை கால்வாயில் தள்ளி கொன்று தாய் தற்கொலை காரணம் என்ன? போலீஸ் விசாரணை


மண்டியா அருகே 2 பிள்ளைகளை கால்வாயில் தள்ளி கொன்று தாய் தற்கொலை காரணம் என்ன? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 25 Jan 2020 4:30 AM IST (Updated: 25 Jan 2020 2:59 AM IST)
t-max-icont-min-icon

மண்டியா அருகே 2 பிள்ளைகளை கால்வாயில் தள்ளி கொன்று தாய் தற்கொலை செய்துகொண்டார். இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மண்டியா,

மண்டியா தாலுகா குல்லேனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி (வயது 33). இவருக்கு திருமணம் ஆகி நிசர்கா(7) என்ற மகளும், பவன் (4) என்ற மகனும் இருந்தனர். இந்த நிலையில் நேற்று காலை ஜோதி கோவிலுக்கு சென்று வருவதாக தனது குடும்பத்தினரிடம் கூறி வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார்.

அப்போது தனது மகள், மகனையும் அவர் உடன் அழைத்து வந்துள்ளார். பின்னர் ஜோதி தனது 2 பிள்ளைகளுடன் அந்த கிராமத்தில் ஓடும் கால்வாய் கரையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில் திடீரென்று ஜோதி தனது மகள் நிசர்கா, மகன் பவன் ஆகியோரை கால்வாயில் தள்ளியுள்ளார். பின்னர் அதே கால்வாயில் ஜோதியும் குதித்தார். தற்போது பாசனத்திற்காக கால்வாயில் அதிகளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் 3 பேரும் நீரில் மூழ்கி உயிருக்கு போராடினர்.

இதை பார்த்த சிலர் கால்வாயில் குதித்து 3 பேரையும் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் நிசர்கா, பவன் ஆகியோர் நீரில் மூழ்கி பலியானார்கள். அதுபோல் ஜோதியும் நீரில் மூழ்கி உயிரிழந்தார். 3 பேரின் உடல்களும் நீரில் அடித்துச் செல்லப்பட்டது.

இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள், சிவள்ளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசாரும், தீயணைப்பு படையினரும் விரைந்து வந்து 3 பேரின் உடல்களையும் தேடினர். நீண்ட நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு ஜோதி உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர். ஆனால் நிசர்கா, பவன் ஆகியோரின் உடல்கள் கிடைக்கவில்லை.

இதையடுத்து மீட்கப்பட்ட ஜோதியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மண்டியா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஜோதி தனது 2 பிள்ளைகளையும் கால்வாயில் தள்ளி கொலை செய்ததுடன், தானும் அதே கால்வாயில் குதித்து தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது. ஆனால் என்ன காரணத்திற்காக ஜோதி இந்த முடிவை எடுத்தார் என்பது தெரியவில்லை. இதுபற்றி சிவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும்
ஏற்படுத்தியுள்ளது.

Next Story