குடியரசு தின விழா: மாவட்டம் முழுவதும் 1,500 போலீசார் பாதுகாப்பு


குடியரசு தின விழா: மாவட்டம் முழுவதும் 1,500 போலீசார் பாதுகாப்பு
x
தினத்தந்தி 25 Jan 2020 4:16 AM IST (Updated: 25 Jan 2020 4:16 AM IST)
t-max-icont-min-icon

குடியரசு தினவிழாவையொட்டி மாவட்டம் முழுவதும் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.05 மணிக்கு, குடியரசு தினவிழா நடைபெறுகிறது. இதில் கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கி, தேசியக்கொடியை ஏற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார்.

இதையடுத்து சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவருடைய வாரிசுகளுக்கு சால்வை அணிவித்து கவுரவிக்கிறார். மேலும் அரசின் பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள், சிறப்பாக பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்குகிறார். இறுதியில் பள்ளி மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

இதையொட்டி குடியரசு தினவிழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் 5 பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கடந்த 3 நாட்களாக, ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து நேற்று காலை, மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஆயுதப்படை போலீசார் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் குடியரசு தினவிழாவையொட்டி அசம்பாவிதங்கள் நடைபெறாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளும்படி உளவுத்துறை எச்சரிக்கை செய்துள்ளது. இதையொட்டி போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் உத்தரவின்பேரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதில் குடியரசு தினவிழா நடைபெறும் திண்டுக்கல் விளையாட்டு மைதானத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. அப்போது துப்பாக்கி ஏந்திய சிறப்பு அதிரடிப்படையினரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதேபோல் பஸ்நிலையங்கள், ரெயில் நிலையங்கள், முக்கிய வழிபாட்டு தலங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மோப்பநாய், வெடிகுண்டுகளை கண்டறியும் கருவி மூலம் சோதனை செய்யப்படுகிறது. மேலும் மாவட்டத்தின் எல்லையில் உள்ள 7 சோதனைச்சாவடிகளிலும் தீவிர வாகன சோதனை நடக்கிறது. இதுதவிர 7 போலீஸ் உட்கோட்டங்களிலும் அந்தந்த போலீஸ் துணை சூப்பிரண்டுகள் தலைமையில் தீவிர ரோந்து பணி மேற்கொள்ளப்படுகிறது.

அதில் சந்தேக நபர்கள் நடமாடுவது தெரியவந்தால், அவர்களை பிடித்து விசாரிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. அதேபோல் திண்டுக்கல், பழனி, கொடைக்கானல், வத்தலக்குண்டு உள்பட முக்கிய ஊர்களில் உள்ள தங்கும் விடுதிகளில் சோதனை நடத்தப்படுகிறது. குடியரசு தினவிழாவையொட்டி மாவட்டம் முழுவதும் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது.

Next Story