விழுப்புரம் மாவட்டத்தில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் - குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்


விழுப்புரம் மாவட்டத்தில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் - குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 25 Jan 2020 3:30 AM IST (Updated: 25 Jan 2020 4:22 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வழங்கப்பட்ட அனுமதியை அரசு ரத்து செய்ய வேண்டும் என்று குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கி விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகள் குறித்து பேசியதாவது:-

விழுப்புரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக 1,000, 2,000 அடிக்கு கிணறு தோண்டப்பட்டால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும். இதற்கு ஒட்டுமொத்த விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். எனவே மரக்காணம் முதல் கோட்டக்குப்பம் வரை ஹைட்ரோ கார்பன் எடுக்க வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்ய வேண்டும்.

தற்போது நெல் விளைச்சல் அமோகமாக உள்ள நிலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்காததால் விவசாயிகள் அடிமாட்டு விலைக்கு நெல் விற்பனை செய்து வருகின்றனர். குறிப்பாக செஞ்சி பகுதியில் ஆலம்பாடி, நாட்டார்மங்கலம், ஆவணிப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும். அதே நேரத்தில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கூடுதலாக நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். அதோடு கொள்முதல் செய்யும் அன்றே நெல் மூட்டைகளை எடை போட்டு உடனுக்குடன் பணப்பட்டுவாடா செய்ய வேண்டும். ஒலக்கூர் ஆற்றில் தடுப்பணை அமைக்க வேண்டும்.

மேலும் விவசாயிகளுக்கு நெல், மணிலா, உளுந்து போன்ற பயிர்களுக்கு உற்பத்தி மானியம் கிடைக்கவில்லை. அந்த மானியம் கிடைத்தால் மட்டுமே விவசாயிகளாகிய நாங்கள் கூடுதலாக சாகுபடியில் ஈடுபட முடியும். எனவே உற்பத்தி மானியம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். காட்டுப்பன்றிகளால் சேதமடையும் விவசாய பயிர்களுக்கு இழப்பீட்டுத்தொகை உடனடியாக கிடைப்பதில்லை. அதிகாரிகள் ஆய்வு என்ற பெயரில் இழுத்தடிப்பு செய்து வழங்குகிறார்கள். உடனடியாக இழப்பீடு வழங்கப்பட வேண்டும். அதே நேரத்தில் விவசாய பயிர்களை காப்பாற்ற காட்டுப்பன்றிகளை பிடிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவலூர்பேட்டை பகுதியில் மின் கோபுரம் அமைக்கும் நிலங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவில்லை. நிவாரணம் கேட்டு பணியை தடுக்கும் விவசாயிகளை போலீசார் மூலம் மின் கோபுரம் பணியை மேற்கொள்ளும் நிறுவனத்தினர் மிரட்டுகின்றனர். எனவே விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள் மேற்கொண்ட ஏரிகளில் தற்போது மீண்டும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளது. அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோன்று ஏரிகளுக்கு செல்லும் நீர்வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்புகளையும் அகற்றி தூர்வார வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகையை உடனடியாக பெற்றுத்தர வேண்டும். மாவட்டத்தில் வறட்சியை கருத்தில் கொண்டு சுகர்பீட் எனப்படும் 4½ மாதத்தில் அறுவடை செய்யப்படும் கரும்பு பயிரை அறிமுகப்படுத்த வேண்டும்.

கூட்டுறவு வங்கிகளில் வட்டியில்லா நகை கடன் வழங்குவதில்லை. மாவட்டம் முழுவதும் இந்த நிலைதான் உள்ளது. விவசாயிகளுக்கு வட்டியில்லா நகை கடன் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். அதேபோல் பட்டா மாற்றம் கோரி தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்து பல ஆண்டுகளாகியும் தீர்வு கிடைக்கவில்லை. லஞ்சம் கொடுப்பவர்களுக்கு மட்டுமே உடனடியாக பட்டா மாற்றம் செய்து கொடுக்கப்படுகிறது. மாவட்ட கலெக்டர் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் வருகிற பிப்ரவரி 1-ந் தேதி முதல் 18 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. அந்த தண்ணீர் தென்பெண்ணையாற்றில் விழுப்புரம் மாவட்டத்தின் கடைமடை பகுதி வரை வருவதற்கு உரிய வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினர். இதை கேட்டறிந்த கலெக்டர், விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங், வேளாண் இணை இயக்குனர் (பொறுப்பு) கென்னடி ஜெபக்குமார், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் பாலகிரு‌‌ஷ்ணன், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அன்பழகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story