கடலூரில், வாடகை பாக்கி செலுத்தாததால் 3 கடைகளுக்கு ‘சீல்’ வைப்பு - நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை


கடலூரில், வாடகை பாக்கி செலுத்தாததால் 3 கடைகளுக்கு ‘சீல்’ வைப்பு - நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 25 Jan 2020 4:15 AM IST (Updated: 25 Jan 2020 5:19 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் வாடகை பாக்கி செலுத்தாததால் 3 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

கடலூர்,

கடலூர் நகராட்சிக்கு சொந்தமாக பஸ் நிலையம், மஞ்சக்குப்பம் அண்ணா மார்க்கெட் மற்றும் பீச்ரோடு பகுதியில் கட்டிடங்கள் உள்ளன. இந்த கட்டிடங்கள் கடைக்காரர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டு நகராட்சி மூலம் மாதந்தோறும் வாடகை வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் பீச் ரோட்டில் உள்ள ஓட்டல் உரிமையாளரும், மஞ்சக்குப்பத்தில் உள்ள 2 கடைக்காரர்களும் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகையை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளனர்.

இதனால் நகராட்சி அதிகாரிகள் ஓட்டல் உரிமையாளர் உள்பட 3 பேரிடமும் வாடகை பாக்கி தொகையை விரைந்து செலுத்துங்கள், இல்லையெனில் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என கடந்த சில நாட்களுக்கு முன்பு எச்சரிக்கை விடுத்தனர். இருப்பினும் அவர்கள் வாடகை பாக்கி செலுத்தவில்லை என தெரிகிறது.

இதனால் நகராட்சி ஆணையாளர் ராமமூர்த்தி, 3 கடைகளுக்கும் ‘சீல்’ வைக்க உத்தரவிட்டார். அதன்படி நகர்நல அலுவலர் அரவிந்த் ஜோதி, நகரமைப்பு அலுவலர் அருள், வருவாய் அலுவலர் சுகந்தி, வருவாய் ஆய்வாளர் சக்திவேல் மற்றும் ஹரிக்குமார், ஜெயசங்கர் ஆகியோர் நேற்று கடலூர் பீச் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலை பூட்டி சீல் வைத்தனர்.

இதேபோல் வாடகை பாக்கி செலுத்தாததால் மஞ்சக்குப்பம் அண்ணா மார்க்கெட் பகுதியில் உள்ள 2 கடைகளுக்கும் அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். நகராட்சி அதிகாரிகளின் இந்த நடவடிக்கையால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story