விருத்தாசலம் அருகே, மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் சாவு - மனைவி, இரட்டை குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை


விருத்தாசலம் அருகே, மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் சாவு - மனைவி, இரட்டை குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 25 Jan 2020 3:15 AM IST (Updated: 25 Jan 2020 5:20 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் உயிரிழந்தார். காயமடைந்த அவரது மனைவி மற்றும் இரட்டை குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விருத்தாசலம்,

ஸ்ரீமு‌‌ஷ்ணம் அருகே உள்ள தேத்தாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சாமிதுரை மகன் சதீ‌‌ஷ்குமார் (வயது 27). இவரது மனைவி மரியாள். இவர்களுக்கு ஜஸ்டின் ராஜா (5), ஜெபஸ்டின் ராஜா(5) என்ற இரட்டை குழைந்ைதகள் உள்ளனர். மரியாள் தற்போது கர்ப்பமாக உள்ளார். இந்த நிலையில் சதீ‌‌ஷ்குமார் தனது மனைவி மற்றும் 2 மகன்களுடன் மோட்டார் சைக்கிளில் விருத்தாசலம் அருகே கோணான்குப்பத்தில் உள்ள புனித பெரியநாயகி அன்னை ஆலயத்தில் நடந்து வரும் பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு நடந்த ஆடம்பர தேர்பவனி நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார்.அங்கு தேர்பவனி முடிந்த பின்னர், மோட்டார் சைக்கிளில் சதீ‌‌ஷ்குமார் தனது மனைவி, இரட்டை குழந்தைகளுடன் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது, தொட்டிக்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே வந்த போது, அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த சதீ‌‌ஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த மரியாள், ஜஸ்டின் ராஜா, ஜெபஸ்டின் ராஜா ஆகியோரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையே விபத்து பற்றி அறிந்த மங்கலம்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சதீ‌‌ஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story