கொடைக்கானலில் உறை பனி - சுற்றுலா பயணிகள் அவதி
கொடைக்கானலில் கடுமையான உறைபனி ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டனர்.
கொடைக்கானல்,
மலைகளின் இளவரசி’ என்று வர்ணிக்கப்படும் கொடைக்கானலில் டிசம்பர் மாதம் தொடக்கத்தில் குளிர் சீசன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து ஜனவரி முதல் வாரத்தில் உறைபனி நிலவியது. பின்னர் பெய்த சாரல் மழையின் காரணமாக குளிரின் தாக்கம் சற்று குறைந்தது.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக வழக்கத்துக்கு மாறாக குளிருடன் மீண்டும் உறைபனி நிலவி வருகிறது. இந்த உறைபனியின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று எப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையான உறைபனி நிலவியது. குறைந்தபட்ச வெப்பநிலை 3 டிகிரியாக பதிவானது.
சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் ஏரிச்சாலை, கீழ்பூமி, ஜிம்கானா, செல்லபுரம், அப்சர்வேட்டரி போன்ற இடங்களில் பனி உறைந்து போய் காணப்பட்டது. வெள்ளைகம்பளம் விரித்தாற்போல் புல்வெளிகளில் பனி படர்ந்து இருந்தது. உறைபனியின் தாக்கம் காரணமாக பெரும்பாலானோர் அதிகாலையில் நடைபயிற்சி செல்வதை தவிர்த்தனர். மேலும் முகம், உதடுகள் வெடிப்பு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர்.
மேலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் டீசல் உறைந்தன. இதனால் வாகனங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இனிவரும் நாட்களில் உறை பனியின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மைய விஞ்ஞானி தெரிவித்தார்.
Related Tags :
Next Story