சென்னையில், 3-ந்தேதி வேலைவாய்ப்பு முகாம் 20 முதல் 35 வயதுக்குட்பட்டோர் பங்கேற்கலாம்


சென்னையில், 3-ந்தேதி வேலைவாய்ப்பு முகாம் 20 முதல் 35 வயதுக்குட்பட்டோர் பங்கேற்கலாம்
x
தினத்தந்தி 26 Jan 2020 3:30 AM IST (Updated: 25 Jan 2020 11:10 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் வருகிற 3-ந்தேதி (திங்கட்கிழமை) வேலைவாய்ப்பு கண்காட்சி-முகாம் நடக்கிறது.

சென்னை,

மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் வேலைவாய்ப்பு தலைமை இயக்ககங்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான தேசிய வேலைவாய்ப்பு சேவை மையம் சார்பில் சென்னையில் வருகிற 3-ந்தேதி (திங்கட்கிழமை) வேலைவாய்ப்பு கண்காட்சி-முகாம் நடக்கிறது. சென்னை தியாகராயநகர் சிவா விஷ்ணு கோவில் பின்புறமுள்ள சுருக்கெழுத்தாளர் சங்கத்தில் இந்த முகாம் நடைபெறுகிறது.

பல்வேறு தனியார் நிறுவனங்களில் பி.பி.ஓ., வங்கி, காப்பீடு, இ-வர்த்தகம், கல்வி, தகவல் தொழில்நுட்பம், விளம்பரம் மற்றும் எப்.எம்.சி.ஜி., மனிதவளம், சந்தை-விற்பனை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள காலி பணியிடங்களுக்காக இந்த முகாம் நடத்தப்படுகிறது. 20 முதல் 35 வயதுக்குட்பட்டோர் பங்கேற்கலாம். பட்டதாரிகள், அதற்கு மேல் படித்தவர்களுக்கு முன்னுரிமை உண்டு.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பொதுவான விண்ணப்பதாரர்களும் கலந்துகொள்ளலாம். அவர்களின் கல்வி தகுதியும், அனுபவமும் நிச்சயம் பரிசீலிக்கப்படும். முகாமில் பங்கேற்போர் தேசிய வேலைவாய்ப்பு சேவை (என்.சி.எஸ்.) இணையதளத்தில் இலவசமாக பதிவு செய்துகொள்ளலாம். முன்பதிவுக்கு விண்ணப்பதாரர்கள் ஆதார் எண்ணை கொண்டுவர வேண்டும்.

இந்த தகவல் தேசிய வேலைவாய்ப்பு சேவை மையத்தின் (சென்னை) உதவி மண்டல வேலைவாய்ப்பு அதிகாரி சுஜித்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளன.
1 More update

Next Story