தூய்மையான சென்னையை உருவாக்க உடற்பயிற்சி முறையில் விழிப்புணர்வு ஓட்டம் மாநகராட்சி கமிஷனர் தகவல்
தூய்மையான சென்னையை உருவாக்குவதற்கான உடற்பயிற்சி முறையில் விழிப்புணர்வு ஓட்டம் வரும் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் நடைபெற உள்ளது.
சென்னை,
சென்னை மாநகராட்சியின் சார்பில் தூய்மையான சென்னையை உருவாக்குவதற்கான உடற்பயிற்சி முறையில் விழிப்புணர்வு ஓட்டம் வரும் பிப்ரவரி மாதம் 2-ந்தேதி சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் கூறியதாவது:-
சென்னை மாநகராட்சியின் சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் வாயிலாக பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தினமும் 5 ஆயிரம் மெட்ரிக் டன் திடக் கழிவுகள் சென்னை மாநகராட்சியில் உருவாகிறது. இவற்றில் 2,500 டன் மக்கும் குப்பைகள் உரம் மற்றும் பயனுள்ள பொருட்களாக மறுசுழற்சி செய்யப்படுகிறது. இதேபோல் 2,500 மெட்ரிக் டன் மக்காத குப்பைகள் மறுசுழற்சி செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனது குப்பை, எனது பொறுப்பு என்று இருந்தால் தான் நகரம் தூய்மையாக இருக்கும். இதனை உணர்ந்து பொதுமக்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். இதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான நடவடிக்கை தான் இந்த ‘உடற்பயிற்சி முறையில் விழிப்புணர்வு ஓட்டம்’ நடத்தப்படுகிறது.
வருகிற பிப்ரவரி மாதம் 2-ந்தேதி பெசன்டர் நகர் எலியட்ஸ் கடற்கரையில் 4.30 மணி முதல் 5.30 மணி வரை உடற்பயிற்சி முறையில் விழிப்புணர்வு ஓட்டம் நடைபெற உள்ளது. ஆரோக்கியமான தூய்மையான சென்னையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நடைபெறும் இந்த விழிப்புணர்வு ஓட்டம் குறித்து ‘ஆசியா சாதனை புத்தகத்தில்’ இடம் பெறுவதற்கான முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் நபர்கள் வரை கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விருப்பமுள்ள தன்னார்வலர்கள் www.chennaiploggathon.com என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம். இதில் பதிவு செய்ய கட்டணம் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story