இன்று குடியரசு தின விழா: பாளையங்கோட்டையில் போலீஸ் அணிவகுப்பு ஒத்திகை


இன்று குடியரசு தின விழா: பாளையங்கோட்டையில் போலீஸ் அணிவகுப்பு ஒத்திகை
x
தினத்தந்தி 25 Jan 2020 10:00 PM GMT (Updated: 25 Jan 2020 6:57 PM GMT)

குடியரசு தின விழாவையொட்டி பாளையங்கோட்டையில் போலீஸ் அணிவகுப்பு ஒத்திகை நேற்று நடந்தது.

நெல்லை,

இந்திய நாட்டின் குடியரசு தின விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் குடியரசு தின விழா நடைபெறுகிறது.

காலை 8.05 மணிக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தேசிய கொடி யேற்றி மரியாதை செலுத்துகிறார். பின்னர் போலீசார், தீயணைப்பு வீரர்கள், வனத்துறை மற்றும் தேசிய மாணவர் படை அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் திறந்த ஜீப்பில் சென்று ஏற்றுக் கொள்கிறார்.

இதையொட்டி போலீசார் நேற்று அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் (சட்டம்-ஒழுங்கு) சரவணன் தலைமையில் இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது போலீஸ் அதிகாரி திறந்த ஜீப்பில் செல்வது போல், போலீசார் அணிவகுப்பு மரியாதை செலுத்துவது போல் ஒத்திகையும், தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்துவதற்கான ஒத்திகையும் நடைபெற்றது.

இதுகுறித்து துணை கமிஷனர் சரவணன் கூறுகையில், “குடியரசு தின விழாவுக்கு வ.உ.சி. மைதானத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இங்கு மட்டும் 300 போலீசார் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுகிறார்கள். இதுதவிர மாநகரம் முழுவதும் 700 போலீசார் பாதுகாப்பு, தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்” என்றார்.

Next Story