மத்திய அரசின் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு நிறுத்தம்: பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு கர்நாடகம் மீது கோபம் ஏன்? சித்தராமையா கேள்வி


மத்திய அரசின் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு நிறுத்தம்: பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு கர்நாடகம் மீது கோபம் ஏன்? சித்தராமையா கேள்வி
x
தினத்தந்தி 26 Jan 2020 3:30 AM IST (Updated: 26 Jan 2020 1:52 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசின் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை நிறுத்தி இருப்பதாக கூறிய சித்தராமையா, கர்நாடகம் மீது பிரதமர் மோடி, அமித்ஷா ஜோடிக்கு இவ்வளவு கோபம் ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

கர்நாடக அரசின் கருவூலம் காலியாகி வருகிறது. அதிகாரிகள் தலை மீது கை வைத்து உட்கார்ந்துள்ளனர். பட்ஜெட் எப்படி தாக்கல் செய்வது என்று கவலையுடன் இருக்கிறார்கள். எடியூரப்பாவால் நிதி நிலையை சரியாக பராமரிக்க முடியவில்லை. உங்களால் (எடியூரப்பா) சரியாக ஆட்சி செய்ய முடியாவிட்டால் ராஜினாமா செய்துவிட்டு வீட்டுக்கு செல்லுங்கள். மாநில அரசின் நலனை நசுக்க வேண்டாம்.

கடந்த 20 ஆண்டுகளில் முதல் முறையாக இந்த ஆண்டு மத்திய அரசின் வருமானம் குறைந்துள்ளது. கர்நாடகத்திலும் அதே நிலை தான் உள்ளது. நாட்டை திவாலாக்க மோடி திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார். அதே போல் கர்நாடகத்தை திவால் நிலைக்கு எடியூரப்பா கொண்டு செல்கிறார். எதற்கெடுத்தாலும் பிரதமர் மோடி பாகிஸ்தான் பெயரை பயன்படுத்துகிறார்.

கர்நாடகத்தில் பா.ஜனதா தலைவர்கள் மத விரோதத்தை தூண்டிவிடுகிறார்கள். பிரதமர் மோடி தனது தவறுகளை மூடிமறைக்க பாகிஸ்தான் பெயரை பயன்படுத்துகிறார். மோடி என்ன செய்கிறாரோ அதையே கர்நாடகத்தில் பா.ஜனதாவினர் பின்பற்றுகிறார்கள். எடியூரப்பாவை ஏமாளியாக்கி பிரதமர் மோடி, அமித்ஷா ஜோடி தண்டிக்கிறதா?. பா.ஜனதாவின் உள்கட்சி பிரச்சினையால் கர்நாடக மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

மந்திரிசபை விரிவாக்கம், அதிருப்தியாளர்களை சரிசெய்வது, கட்சி மேலிடத்திடம் செல்வது போன்றவற்றிலேயே 6 மாதத்தை எடியூரப்பா கழித்துவிட்டார். பா.ஜனதா மேலிடம் எடியூரப்பாவை கண்டுகொள்வதே இல்லை. எடியூரப்பா மூழ்கி கொண்டிருக்கிறார். அத்துடன் கர்நாடகத்தையும் மூழ்க வைத்து வருகிறார்.

மத்திய அரசின் திட்டங் களுக்கு நிதி ஒதுக்கீடு நிறுத்தப்பட்டுள்ளது. கர்நாடக அரசுக்கு வரவேண்டிய வரி பங்குத்தொகை ஒதுக்கவில்லை. சரக்கு-சேவை வரி திட்டத்தில் கர்நாடகத்தில் வழங்க வேண்டிய நிதியும் ஒதுக்கவில்லை. மந்திரிசபை விரிவாக்கத்திற்கும் பா.ஜனதா மேலிடம் அனுமதி வழங்காமல் இழுத்தடிக்கிறது. கர்நாடகம் மீது மோடி, அமித்ஷா ஆகியோருக்கு ஏன் இவ்வளவு கோபம்?.

நிதி இல்லாமல் வளர்ச்சி திட்ட பணிகள் நிறுத்தப்பட்டு உள்ளன. ஒப்பந்ததாரர்கள் பணிகளை பாதியிலேயே விட்டுவிட்டு சென்றுவிட்டனர். காலியாக உள்ள கஜானாவை நிரப்ப விவசாயிகளிடம் கடனை வசூலிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. எம்.எல்.ஏ.க்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதி வளர்ச்சி நிதியும் நிறுத்தப்பட்டுள்ளது. கர்நாடக அரசின் வரி வருவாய் குறைந்துவிட்டது. மாநில அரசின் கடன் அதிகரித்து வருகிறது. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதிலும் சிக்கல் ஏற்படும் நிலை விரைவில் உருவாகும். திறனற்றவர்களின் கைக்கு அதிகாரத்தை கொடுத்தால் இந்த கதி தான் ஏற்படும். இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.

Next Story