சென்னை மாநகராட்சி ஊழியர் கழுத்து அறுத்து படுகொலை வாலிபருக்கு வலைவீச்சு
ஊரப்பாக்கத்தில் சென்னை மாநகராட்சி ஊழியர் கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தாம்பரம்,
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் வள்ளியம்மாள் தெருவை சேர்ந்தவர் பூபதி (வயது 40). இவர் சென்னை மாநகராட்சி குடிநீர் வாரிய ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று இரவு தனது நண்பர்கள் ஆறுமுகம், சீனு ஆகியோருடன் மது அருந்துவதற்காக ஆட்டோ ஒன்றில் கிளாம்பாக்கம் நோக்கி டாஸ்மாக் கடைக்கு சென்று கொண்டிருந்தார்.
செல்லும் வழியில் ஆட்டோ மீது ஒரு மோட்டார் சைக்கிள் ஒன்று லேசாக உரசியதாக தெரிகிறது. இதனால் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபருக்கும், ஆட்டோவில் இருந்த பூபதி, ஆறுமுகம், சீனு ஆகியோருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது. பின்னர் இருதரப்பினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
படுகொலை
பின்னர் பூபதி உள்ளிட்ட 3 பேரும் ஆட்டோவில் கிளாம்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றனர். பூபதி ஆட்டோவில் அமர்ந்து இருந்தார். ஆறுமுகம், சீனு இருவரும் மது வாங்குவதற்காக கிளம்பாக்கம் மேம்பாலத்தின் கீழ் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றனர்.
அப்போது ஏற்கனவே தகராறில் ஈடுபட்ட மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் அந்த ஆட்டோவை பின் தொடர்ந்து அங்கு வந்து இருந்தார். ஆத்திரத்தில் இருந்த அந்த வாலிபர் ஆட்டோவில் தனியாக இருந்த பூபதியை கத்தியால் கழுத்தை அறுத்து விட்டு தப்பிச்சென்று விட்டார். இதில் படுகாயம் அடைந்த பூபதி, ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
வலைவீச்சு
இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் அங்கு விரைந்து வந்து பூபதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுபற்றி வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் உரசிய தகராறில்தான் பூபதி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது பற்றி விசாரித்து வருகின்றனர். தப்பி ஓடிய வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story