சேலம் அருகே, 11 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு; உடற்கல்வி இயக்குனருக்கு வலைவீச்சு


சேலம் அருகே, 11 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு; உடற்கல்வி இயக்குனருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 26 Jan 2020 4:00 AM IST (Updated: 26 Jan 2020 5:42 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அருகே 11 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கல்லூரி உடற்கல்வி இயக்குனரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இது குறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-

ஆத்தூர்,

சேலம் அருகே உள்ள அயோத்தியாபட்டணம் பகுதியை சேர்ந்த 42 வயதான ஒருவர், கரூரில் உள்ள கல்லூரி ஒன்றில் உடற்கல்வி இயக்குனராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சேலத்தில் உள்ள கல்லூரியில் உதவி பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்தவர்கள் ஆவார்கள்.

இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகளும், 11 வயதில் ஒரு மகளும் உள்ளனர். 13 வயது மகள் ராசிபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கிறார். 11 வயது மகள் அயோத்தியாப்பட்டணம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார்.

இந்த நிலையில் அந்த 11 வயது சிறுமி, சேலம் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு குழு உறுப்பினர் தாமரை, சைல்டு லைன் உறுப்பினர் சிவசக்தி மற்றும் அந்த சிறுமியின் தாயார் உடன் ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வந்து ஒரு புகார் கொடுத்தார்.

புகாரில், தனது தந்தை தனது தாயார் இல்லாத நேரத்தில் தன்னை தொடக்கூடாத இடத்தில் தொட்டு பாலியல் தொந்தரவுகள் செய்துவந்தார். இது குறித்து எனது தாயாரிடம் பலமுறை கூறினேன். எனது தாய் ஒரு நாள் நேரில் பார்த்து விட்டார். எனது தந்தை மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

சிறுமியின் புகாரின்பேரில் ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உமா பிரியதர்ஷினி, சப்-இன்ஸ்பெக்டர் தனலட்சுமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே தலைமறைவான உடற்கல்வி இயக்குனரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

11 வயது மகளுக்கு உடற்கல்வி இயக்குனர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story