என்.எல்.சி.யில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.5¼ லட்சம் மோசடி - வாலிபர் கைது
என்.எல்.சி.யில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.5¼ லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்,
நெய்வேலி அருகே உள்ள சேப்ளாநத்தம் பகுதியை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் மகன் விஜயசுந்தரம் (வயது 31). இவர் நெய்வேலி 27-வது வட்டம் தட்டாரவீதியை சேர்ந்த மணிமாலை மகன் விஷ்ணுகோபான்(29) என்பவரிடம், தான் நெய்வேலி என்.எல்.சி.யில் பலருக்கு ஒப்பந்த வேலை வாங்கி கொடுத்துள்ளதாகவும், உங்களுக்கு வேலை வாங்கி தர வேண்டுமானால் ரூ.1½ லட்சம் கொடுங்கள், என்.எல்.சி.யில் வேலை வாங்கி தருகிறேன் என கூறியதாக தெரிகிறது.
இதை உண்மை என்று நம்பிய விஷ்ணுகோபான், முதற்கட்டமாக ரூ.75 ஆயிரத்தை விஜயசுந்தரத்திடம் கொடுத்தார். மேலும் விஜயசுந்தரத்தின் தந்தை ரூ.2½ லட்சத்தை விஷ்ணுகோபானிடம் இருந்து கடனாக பெற்றுக்கொண்டார். இந்நிலையில் பணத்தை பெற்றுக்கொண்ட அவர் வேலை வாங்கி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விஷ்ணுகோபான், விஜயசுந்தரத்திடம் சென்று தனது பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். அப்போது அவர் பணம் கொடுக்க மறுத்ததோடு, கொலை மிரட்டலும் விடுத்ததாக தெரிகிறது.
அதன் பிறகு தான் என்.எல்.சி.யில் வேலை வாங்கி தருவதாக கூறி விஜயசுந்தரம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதும், இதுபோல் மேலும் 10 பேரிடம் பணம் பெற்று மோசடி செய்ததும் விஷ்ணுகோபானுக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுத்தார். அதன் பேரில் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரம் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் விஜயசுந்தரம் என்.எல்.சி.யில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் இருந்து மொத்தம் ரூ.5¼ லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. இதற்கிடையே மயிலாடுதுறை பேருந்து நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்த விஜயசுந்தரத்தை, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
Related Tags :
Next Story