நாகையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், ரூ.1 கோடியே 91 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் பிரவீன்நாயர் வழங்கினார்


நாகையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், ரூ.1 கோடியே 91 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் பிரவீன்நாயர் வழங்கினார்
x
தினத்தந்தி 27 Jan 2020 3:45 AM IST (Updated: 26 Jan 2020 11:30 PM IST)
t-max-icont-min-icon

நாகையில் நேற்று நடந்த குடியரசு தின விழாவில் கலெக்டர் பிரவீன்நாயர் ரூ.1 கோடியே 91 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நாகப்பட்டினம், 

நாகை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவுக்கு நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன்நாயர் தலைமை தாங்கி, தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் போலீஸ்துறை, ஊர்க்காவல் படை, தேசிய மாணவர் படை, சாரணர் இயக்க மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

விழாவில் சுதந்திர போராட்ட தியாகிகள் 3 பேர் கவுரவிக்கப்பட்டனர். அதேபோல் சிறப்பாக பணியாற்றிய தீயணைப்பு படை வீரர்கள், வேளாண்மைத்துறை அலுவலர்கள், நகராட்சி நிர்வாக அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் மொத்தம் 151 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

தொடர்ந்து பல்வேறு துறைகள் சார்பில் 103 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 91 லட்சத்து 37 ஆயிரத்து 256 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பிரவீன்நாயர் வழங்கினார். விழாவையொட்டி பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. முன்னதாக ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமையில் போலீசாரின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது.

விழாவில் மாவட்ட கூடுதல் கலெக்டர் பிரசாந்த், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம், உதவி கலெக்டர் பழனிகுமார், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் ராஜன், தாசில்தார் பிரான்சிஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மயிலாடுதுறையில் உதவி கலெக்டர் அலுவலகத்தில் 71-வது குடியரசு தினவிழா நடைபெற்றது. விழாவிற்கு உதவி கலெக்டர் மகாராணி தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசினார். அப்போது தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துக்குமார் மற்றும் அவரது குழுவினரின் தலைமையில் நடைபெற்ற அணிவகுப்பு மரியாதையை உதவி கலெக்டர் ஏற்றுக் கொண்டார்.

விழாவில் முதியோர் உதவித்தொகை, ஊனமுற்றோர் உதவித்தொகை ஆகிய நலத்திட்ட உதவிகளை 21 பேருக்கு உதவி கலெக்டர் வழங்கினார். நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் நகராட்சி ஆணையர் புவனேஸ்வரன் என்கிற அண்ணாமலை தேசிய கொடி ஏற்றி வைத்தார்.

மயிலாடுதுறையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் குடியரசு தினவிழா நடைபெற்றது. விழாவிற்கு காவேரி வடிநில கோட்ட (கிழக்கு) செயற்பொறியாளர் ஆசைத்தம்பி தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். மயிலாடுதுறை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் முருகானந்தம் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

மயிலாடுதுறை நூலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் வாசகர் வட்ட தலைவர் ராமமூர்த்தி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் கட்சியை சேர்ந்த ராஜசேகரன், கோவிந்தராஜன், ராஜதுரை, கலைமணி, நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடியரசு தின விழா நடந்தது. விழாவிற்கு ஒன்றிய ஆணையர் சரவணன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் ஜான்சன், ஒன்றியக்குழு துணை தலைவர் மகேஸ்வரி முருகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய மேலாளர் கலியராஜ் வரவேற்று பேசினார்.

இதில் ஒன்றியக்குழு தலைவர் காமாட்சி மூர்த்தி கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

Next Story