புதிதாக உதயமான செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல் முறையாக குடியரசு தினவிழா கொண்டாட்டம் - கலெக்டர் தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை
புதிதாக செங்கல்பட்டு மாவட்டம் உதயமான நிலையில், முதல்முறையாக குடியரசு தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கலெக்டர் ஜான் லூயிஸ் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
செங்கல்பட்டு,
குடியரசு தினத்தையொட்டி நேற்று செங்கல்பட்டு அரசு ஐ.டி.ஐ. பின்புறத்தில் குடியரசு தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் புதியதாக உதயமானதையடுத்து, நடைபெறும் முதல் குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் கலந்து கொண்டு தேசியக் கொடி ஏற்றினார். பின்னர் நடைபெற்ற போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனையடுத்து வருவாய்த்துறை சார்பில் 40 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா, 5 பேருக்கு தொகுப்பு வீடுகள், ஒரு மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர மோட்டார் சைக்கிள், வேளாண்மை துறை சார்பில் 10 பேருக்கு டிராக்டர் உள்ளிட்ட உதவிகளை வழங்கினார்.
மேலும் தோட்டக்கலை சார்பில் 16 பேருக்கு ஒருங்கிணைந்த தோட்டக்கலை திட்டத்தினை தொடங்கி வைத்தார். இதில் 31 போலீசாருக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
இதுபோல காஞ்சீபுரம் மாவட்டத்தை பிரித்து செங்கல்பட்டு மாவட்டமாக மாற்றி அமைப்பதற்கான பணியில் சிறப்பாக பணிபுரிந்த அரசு ஊழியர்கள் 126 பேருக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் 31 ஆசிரியர் ஆசிரியைகளுக்கு நற்சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார். 6 மொழிப்போர் தியாகிகளுக்கு பொன்னாடை போற்றி கவுரவிக்கப்பட்டது. விழாவில் மாவட்ட போலிஸ் சூப்பிரண்டு கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, ஆர்.டி.ஒ.செல்வம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இது போல செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் பார் சங்க தலைவர் சொக்கலிங்கம் தலைமையில் மாவட்ட நீதிபதி வசந்த லீலா தேசிய கொடியேற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ. தேசிய கொடியேற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்.
மதுராந்தகம்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிமன்ற நீதிபதியுமான எ.சரிதா தலைமையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஜி.பிரியா, நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி டி.திருமால் மற்றும் வக்கீல்கள் கலந்து கொண்டனர்.
மதுராந்தகம் ஆர்.டி.ஓ.அலுவலகத்தில் ஆர்.டி.ஓ.லட்சுமி பிரியா தேசிய கொடி ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கி வருவாய் துறையில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தாசில்தார் வேல்முருகன் தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். மதுராந்தகம் துணைபோலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மகேந்திரன் தேசிய கொடி ஏற்றினார். நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் நாராயணன் தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். இதில் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் பூக்கடை சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தனி அலுவலர்கள் பாபு, கல்யாணி ஆகியோர் தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கினார்கள். சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தனி அலுவலர்கள் பரணி, நிர்மலன் ஆகியோர் தேசியக்கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்கள்.
ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கம் தலைவர் கோ.பஅன்பழகன் அலுவலகத்தில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார். ஆன்மிக இளைஞர் இயக்க தலைவர் கோ.ப.செந்தில்குமார் அலுவலகத்தில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார்.
வண்டலூர்
செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சி செயலர் டி.ராமபக்தன் தேசிய கொடியை ஏற்றி பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
வண்டலூர் ஊராட்சி அலுவலகத்தில் தேசிய கொடியை ஊராட்சி செயலர் எ.வீரராகவன் ஏற்றி வைத்து பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். காரணைப்புதுச்சேரி ஊராட்சி அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து ஊராட்சி செயலர் ஜெ.ஜெயச்சந்திரன் பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
நெடுங்குன்றம் ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சி செயலர் எம்.ஏழுமலை தேசிய கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
திருக்கழுக்குன்றம்
திருக்கழுக்குன்றம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் பீம்குமார் தலைமை தாங்கினார். ஆசிரியர் பாலசுந்தரம் வரவேற்றார்.
இதில் காஞ்சீபுரம் மாவட்ட பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எஸ். ஆறுமுகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். தலைமையாசிரியர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில், அவர் குடியரசு தினத்தின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களிடம் சிறப்புரையாற்றினர்.
அச்சரப்பாக்கம்
செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் டி.எஸ்.சரவணன் காவல் நிலையம் எதிரே உள்ள வளாகத்தில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செய்தார்.
அச்சரப்பாக்கம் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் மா.கேசவன் தேசிய கொடி ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். இடை கழிநாடு பேரூராட்சியில் செயல் அலுவலர் சாந்த ஜெயலட்சுமி தேசியகொடி ஏற்றினார்.
ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலக வளாகத்தில் அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் எம்.முரளி தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். வட்டார வளர்ச்சி அலுவலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story