பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் குடியரசு தினவிழா கோலாகலம்: கலெக்டர் ஷில்பா தேசிய கொடி ஏற்றினார்


பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் குடியரசு தினவிழா கோலாகலம்: கலெக்டர் ஷில்பா தேசிய கொடி ஏற்றினார்
x
தினத்தந்தி 26 Jan 2020 10:30 PM GMT (Updated: 26 Jan 2020 7:07 PM GMT)

பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கலெக்டர் ஷில்பா தேசிய கொடியை ஏற்றி வைத்தார். மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.

நெல்லை, 

நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் குடியரசு தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் மாவட்ட கலெக்டர் ஷில்பா கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். மூவர்ண பலூன்களை விண்ணில் பறக்க விட்டார்.

பின்னர் போலீசார், தீயணைப்பு படையினர், தேசிய மாணவர் படையினர், ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். மேலும் திறந்த ஜீப்பில் சென்று அணிவகுப்பை பார்வையிட்டார். அப்போது ஜீப்பில் மாவட்ட போலீ்ஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா உடன் சென்றார். இந்த அணிவகுப்பை போலீஸ் இன்ஸ்பெக்டர் மரிய கிளாஸ்டன் ஜோஸ் தலைமை தாங்கி நடத்திச்சென்றார். சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் வாத்திய இசைக்குழுவினர் முன்நின்று அணிவகுப்பு இசை எழுப்பிச் சென்றனர்.

இதை தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகள் சீதா, முருகன் மற்றும் சிறப்பு தியாகிகள், மொழிக்காவலர், சுதந்திர போராட்ட தியாகிகள் குடும்பத்தினர் என 11 பேருக்கு கலெக்டர் ஷில்பா பொன்னாடை அணிவித்து கவுரவப்படுத்தினார். வீரமரணம் அடைந்த கே.டி.சி.நகரை சேர்ந்த மத்திய பாதுகாப்பு படை வீரர் சுப்பிரமணியன் மனைவி சுப்புலட்சுமியையும் கலெக்டர் கவுரவப்படுத்தினார்.

மேலும், 93 போலீசாருக்கு முதல்-அமைச்சர் பதக்கம் வழங்கப்பட்டது. நெல்லை மாநகரத்தை சேர்ந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்கதுரை, செல்வராஜன், புறநகர் மாவட்டத்தை சேர்ந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அலெக்சாண்டர் உள்பட 93 பேருக்கு முதல்-அமைச்சர் பதக்கங்களை கலெக்டர் ஷில்பா அணிவித்தார்.

பல்வேறு அரசு துறைகளில் சாதனை படைத்த அதிகாரிகள், ஊழியர்களுக்கு விருதுகள் மற்றும் பாராட்டு சான்றுகளை அவர் வழங்கினார். போலீஸ், வருவாய்த்துறை, 108 ஆம்புலன்ஸ் சேவை என 19 துறைகளை சார்ந்த 91 பேருக்கு நற்சான்றுகளும், 14 பேருக்கு பதக்கங்களும் வழங்கப்பட்டன.

இதில் வள்ளியூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத், நாங்குநேரி இன்ஸ்பெக்டர் சபாபதி, தச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் உள்பட 19 பேருக்கு நற்சான்று வழங்கப்பட்டது. நெல்லை உதவி கலெக்டர் மணீஷ் நாரணவரே உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் டாக்டர்களுக்கு நற்சான்று வழங்கப்பட்டது.

முன்னாள் படை வீரர் நலத்துறை சார்பில் ரூ.75 ஆயிரம் மானியத்தொகை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 8 பேருக்கு உருப்பெருக்கிகள், ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் வருவாய்த்துறை சார்பில் 57 பேருக்கு இலவச வீட்டு மனைப்பட்டா, 20 பேருக்கு இஸ்திரி பெட்டிகள், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 10 பேருக்கு பல்வேறு வகையான உதவித்தொகைகள், வேளாண்மை துறை சார்பில் தென்னை மரம் ஏறும் கருவி, விசை தெளிப்பான், மகளிர் திட்டத்தின்கீழ் சுய உதவிக்குழு கடன், தோட்டக்கலைத்துறை சார்பில் பவர் டில்லர் என மொத்தம் 293 பேருக்கு 4.68 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இறுதியாக 8 பள்ளிக்கூடங்களை சேர்ந்த மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஜவஹர் நகர் புனித ஜோசப் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் இயற்கை பாடலுக்கான நடனம், சேரன்மாதேவி அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி மாணவிகளின் தமிழின் பெருமை பாடல் நடனம், பாளையங்கோட்டை பார்வைத்திறன் குறையுடையோருக்கான மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் தேச பக்தி பாடல் நடனம் ஆகியவை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த நிகழ்ச்சியை கண்ட கலெக்டர் உள்ளிட்ட அனைவரும் எழுந்து நின்று பாராட்டு தெரிவித்தனர்.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அரசு பள்ளி மாணவிகள் சிலம்பம், கராத்தே போன்ற தற்காப்பு கலைகளை தத்ரூபமாக செய்து காட்டினர். இந்த நிகழ்ச்சி மெய் சிலிர்க்க வைத்தது.

சங்கரன்கோவில் ஸ்ரீமகாலட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ-மாணவிகளின் ‘எனது இந்தியா வந்தே மாதரம்’ நடனம், டவுன் கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் ‘எங்கள் தேசம் இந்தியா’ நடனம், மேலப்பாளையம் கோல்டன் ஜூப்ளி மெட்ரிக் பள்ளி மாணவர்களின் ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே’ நடனம் மற்றும் திசையன்விளை ஜெயராஜேஷ் மெட்ரிக் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியைகளின் தேச பக்தி பாடல்களுக்கான நடனம் பார்வையாளர்களின் கண்களை கவருவதாக அமைந்திருந்தது.

இந்த விழாவில் முத்துக்கருப்பன் எம்.பி., மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் டாமோர், சரக டி.ஐ.ஜி. பிரவீன் அபிநபு, மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் சரவணன், மகேஷ்குமார், நெல்லை சி.எஸ்.ஐ. பிஷப் ஜே.ஜே.கிறிஸ்துதாஸ் மற்றும் ஏராளமான பொதுமக்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முதன்மை கல்வி அலுவலக சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் கணேசன், தமிழ் ஆசிரியர் கணபதி சுப்பிரமணியன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ராஜ்குமார் அருளானந்தம், ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் ஜெயமேரி ஆகியோர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். விழாவையொட்டி போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Next Story