சென்னையில் அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா கொண்டாட்டம்


சென்னையில் அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 27 Jan 2020 3:45 AM IST (Updated: 27 Jan 2020 1:32 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் உள்ள மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் குடியரசு தினவிழா கொண்டாட்டம் நடைபெற்றது.

சென்னை, 

குடியரசு தின விழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னையில் உள்ள மத்திய, மாநில அரசு அலுவலகங்களிலும் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாட்டப்பட்டது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் வருமானவரித்துறை அலுவலகம் அமைந்துள்ள ஆயக்கர் பவனில் வருமானவரித்துறை தலைமை கமிஷனர் அனு ஜெ.சிங் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார். அதே பகுதியில் உள்ள மத்திய ஜி.எஸ்.டி. மற்றும் கலால் வரித்துறை அலுவலக வளாகத்தில் அதன் தலைமை கமிஷனர் எஸ்.கண்ணன் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார். ராஜாஜி சாலையில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்தில் அதன் முதன்மை கமிஷனர் எம்.எம்.பார்த்திபன் தேசிய கொடியேற்றினார்.

தேனாம்பேட்டையில் உள்ள மாநில தலைமை கணக் காயர் அலுவலகத்தில் தணிக்கைத்துறை பொது இயக்குனர்(மத்தி) எஸ்.சேனலதா மற்றும் வணிக தணிக்கை பிரிவு பொது இயக்குனர் ஆர்.அம்பலவாணன் ஆகியோர் தேசிய கொடியேற்றினர். சென்னை எழும்பூர் தாளமுத்து நடராஜன் கட்டிட வளாகத்தில் உள்ள ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தில் அதன் செயல் இயக்குனர் வி.ஷியாம் மோகன் தேசிய கொடியேற்றினார்.

சென்னை துறைமுகத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்புப்படை மைதானத்தில் துறைமுக தலைவர் பி.ரவீந்திரன் தேசிய கொடியேற்றினார். எண்ணூரில் உள்ள காமராஜர் துறைமுக வளாகத்தில், துறைமுகத்தின் தலைவர் சுனில் பாலிவால் தேசிய கொடியேற்றி, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

கோயம்பேட்டில் உள்ள சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலக வளாகத்தில் அதன் மேலாண்மை இயக்குனர் பங்கஜ்குமார் பன்சால் தேசிய கொடியேற்றி, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அண்ணாசாலையில் உள்ள எல்.ஐ.சி. தென்மண்டல அலுவலக வளாகத்தில் தென்மண்டல மேலாளர் கே.கதிரேசன், ராயப்பேட்டையில் உள்ள இந்தியன் வங்கி அலுவலகத்தில், வங்கியின் நிர்வாக இயக்குனர் பத்மஜா சந்துரு ஆகியோர் தேசிய கொடியேற்றி வைத்தனர்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அலுவலக வளாகத்தில் மாநில தேர்தல் ஆணையர் இரா.பழனிசாமி தேசிய கொடியேற்றினார். இதில் மாநில தேர்தல் ஆணைய செயலாளர் இல.சுப்பிரமணியன் மற்றும் மாநில தேர்தல் ஆணைய உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். சென்னை எழிலக வளாகத்தில், வருவாய் நிர்வாக ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் கமிஷனர் கோ.பிரகாஷ் தேசிய கொடியேற்றி, தேசிய மாணவர்படை, கலர் பார்ட்டி, சாரண-சாரணியர் மற்றும் வாத்தியக்குழுக்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு கடனுதவி வழங்கியதுடன், பெருநகர மாநகராட்சியில் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு கேடயங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார். பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் ஆர்.சீத்தாலட்சுமி தேசிய கொடியேற்றி, தியாகிகளை கவுரவித்து பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் அதன் மேலாண்மை இயக்குனர் டி.என்.ஹரிஹரன், சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் தலைமை அலுவலகமான பல்லவன் இல்லத்தில் மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் கோ.கணேசன், நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை வளாகத்தில், முதன்மை செயலர் க.பணீந்திர ரெட்டி ஆகியோர் தேசிய கொடியேற்றினர்.

சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் அதன் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் தேசிய கொடியேற்றினார். பல்கலைக்கழகத்தின் பதிவாளர் டாக்டர் போ.ஆறுமுகம் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழக வளாகத்தில், பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கே.பார்த்தசாரதி, தமிழ்நாடு வக்பு வாரிய தலைமை அலுவலகத்தில் அதன் உதவி செயலாளர் எஸ்.வசீர் அகமது லெப்பை ஆகியோர் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினர்.

Next Story