நாகர்கோவிலில் குடியரசு தின விழா: கலெக்டர் தேசிய கொடி ஏற்றினார்
நாகர்கோவிலில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே தேசிய கொடியை ஏற்றினார். அதன்பிறகு மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
நாகர்கோவில்,
குடியரசு தின விழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதே போல குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நாகர்கோவில் வடசேரியில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கத்தில் குடியரசு தின விழா வெகு விமரிசையாக நடந்தது. இதையொட்டி அங்கு அமைக்கப்பட்டு இருந்த கொடிக்கம்பத்தில் காலை 8.05 மணிக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் தேசிய கொடி நிறத்தில் மூவர்ண பலூன்களை வானில் பறக்க விட்டார்.
அதைத்தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பை கலெக்டர் பிரசாந்த் வடநேரே திறந்த ஜீப்பில் சென்று பார்வையிட்டார். அப்போது அவருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உடன் இருந்தார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்று கொண்டார். இந்த அணி வகுப்பில் முதலில் ஆயுதப்படை போலீசார் செல்ல அவர்களை தொடர்ந்து தீயணைப்பு படை வீரர்கள், ஊர்காவல் படை வீரர்கள் மற்றும் தேசிய மாணவர் படையினர் அணிவகுத்து வந்தனர்.
அதன்பிறகு போலீஸ் துறையை சேர்ந்த 64 பேருக்கு முதல்-அமைச்சர் பதக்கம் வழங்கப்பட்டது.
பின்னர் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முன்னாள் படைவீரர் நலத்துறை மூலம் 2 பேருக்கு மொத்தம் ரூ.50 ஆயிரமும், ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் 2 பேருக்கு ரூ.10 ஆயிரத்து 36 மதிப்பில் இஸ்திரி பெட்டிகளும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் 6 பேருக்கு மொத்தம் ரூ.6 ஆயிரம் நிதி உதவியும், வேளாண்மைத்துறை மூலம் 5 பேருக்கு ரூ.26 ஆயிரத்து 316 நலத்திட்ட உதவியும் என மொத்தம் 15 பேருக்கு ரூ.92 ஆயிரத்து 352 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
அதன்பிறகு சிறப்பாக பணிபுரிந்த அரசு ஊழியர்கள் 51 பேருக்கு பாராட்டு சான்றிதழ், விளையாட்டில் சிறப்பாக செயல்பட்ட 15 பேருக்கும் பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்களை கலெக்டர் பிரசாந்த் வடநேரே வழங்கினார்.
இதைத் தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. தேசபக்தி, தேசிய ஒருமைப்பாட்டை விளக்கும் விதமாக நடைபெற்ற இந்த கலை நிகழ்ச்சிகளில் மொத்தம் 5 பள்ளிகளை சேர்ந்த 190 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.
அதிலும் ஒரு பள்ளியை சேர்ந்த மாணவர்கள் ஒருவர் மீது மற்றொருவர் ஏறி நின்று செய்து காட்டிய சாகச நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
விழாவில் வசந்தகுமார் எம்.பி., சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ., வருவாய் அதிகாரி ரேவதி, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) மெர்சி ரம்யா, பத்மநாபபுரம் சப்-கலெக்டர் சரண்யா அரி, நாகர்கோவில் கோட்டாட்சியர் மயில், மாவட்ட தீயணைப்பு அதிகாரி சரவணபாபு, உதவி போலீஸ் சூப்பிரண்டுகள் ஜவகர், விஸ்வேஸ் சாஸ்திரி, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி டீன் சுகந்தி ராஜகுமாரி, மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
குடியரசு தின விழாவையொட்டி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் தீயணைப்பு வாகனமும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
குடியரசு தின விழாவுக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே குடும்பத்துடன் வந்திருந்தார். அவர் மனைவி அம்ருதா பிரசாந்த் மற்றும் மகளுடன் மேடையில் அமர்ந்து இருந்தனர். இதே போல போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், மனைவி சிந்து, மகள் ரிஷா ஆகியோருடன் கலந்து கொண்டார்.
குமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி-கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், அரசியல் கட்சி அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்றி குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
Related Tags :
Next Story