குடியரசு தின விழாவில் 129 பேருக்கு நலத்திட்ட உதவி - கலெக்டர் வழங்கினார்


குடியரசு தின விழாவில் 129 பேருக்கு நலத்திட்ட உதவி - கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 26 Jan 2020 9:45 PM GMT (Updated: 26 Jan 2020 9:24 PM GMT)

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. இதில் கலெக்டர் ஜெயகாந்தன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குடியரசு தின விழா சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாக மைதானத்தில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் ஜெயகாந்தன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். அப்போது போலீஸ் குழுவினர் தேசிய கீதம் இசைத்தனர். தொடர்ந்து கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ரோஹித்நாதன் ஆகியோர் திறந்த ஜீப்பில் ஏறி சென்று போலீஸ் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டனர். பின்னர் சுதந்திர போராட்ட தியாகிகள் இருந்த இடத்திற்கு சென்று கலெக்டர் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். மேலும் காவல் துறையில், தண்டனை பெறாமல் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த போலீஸ் தனிப்பிரிவு ஏட்டு மகேந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ், மருதமுத்து, தனசேகரன், சிவகங்கை நகர் ஏட்டு அய்யனார் உள்பட 52 பேருக்கு முதல்-அமைச்சர் பதக்கங்களை கலெக்டர் வழங்கினார்.

தொடர்ந்து காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்த இன்ஸ்பெக்டர்கள் பிரும் ஆனந்த், மோகன், செந்தில் குமார், ஜெயராணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராதாகிருஷ்ணன், சபரிநாதன், முத்துகிருஷ்ணராஜா உள்பட 96 போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். மேலும் பேரூராட்சி உதவி இயக்குனர் ராஜா மற்றும் செயல் அலுவலர்கள் உமாமகேஸ்வரன், ராதாகிருஷ்ணன், தனுஷ்கோடி, சந்திரகலா, குமரேசன், பாலுசுப்பிரமணியன், துப்புரவு ஆய்வாளர் தங்க துரை, ஜீப் டிரைவர் முத்துச்சாமி, கம்ப்யூட்டர் ஆபரேட்டர் ரேவதி, மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன், பாலசுப்பிரமணியன் மற்றும் வேலாயுதபட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் பிரபாவதி, பெரிய கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் அரவிந்த ஆதவன் உள்பட பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு துறையை சேர்ந்த 15 பேருக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 4,500 பேருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்களை கலெக்டர் வழங்கினார். தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

முன்னாள் படைவீரர் நலத்துறை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வருவாய்த்துறை, தொழில் வணிகத்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 129 பேருக்கு ரூ.14 லட்சத்து 47 ஆயிரத்து 196 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில் மானாமதுரை எம்.எல்.ஏ. நாகராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் லதா, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேல், மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் அருண்மணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மங்களேஸ்வரன், முரளிதரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராமபிரதீபன், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் செல்வகுமாரி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

Next Story