குடியரசு தினவிழாவில் ரூ.59 லட்சம் நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் விஜயலட்சுமி வழங்கினார்


குடியரசு தினவிழாவில் ரூ.59 லட்சம் நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் விஜயலட்சுமி வழங்கினார்
x
தினத்தந்தி 27 Jan 2020 4:15 AM IST (Updated: 27 Jan 2020 2:58 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் நடந்த குடியரசு தினவிழாவில் ரூ.59 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் விஜயலட்சுமி வழங்கினார்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், குடியரசு தினவிழா நடைபெற்றது. இதில் கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கி, தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் சமாதானத்தின் அடையாளமாக வெண் புறாக்களையும், மூவர்ண பலூன்களையும் பறக்கவிட்டார்.

இதையடுத்து போலீசார், தீயணைப்புத்துறை, ஊர்க்காவல்படை, தேசிய மாணவர் படையினர் அளித்த அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் ஏற்றுக் கொண்டார். பின்னர் இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார்.

இதைத் தொடர்ந்து போலீஸ் துறையில் சிறப்பாக பணியாற்றிய கைரேகை பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு சீனியம்மாள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் ராஜமுரளி, லாவண்யா, சப்-இன்ஸ்பெக் டர்கள் மாரிமுத்து, இளஞ்செழியன் உள்பட 25 பேருக்கு பாராட்டு சான்றும், 68 பேருக்கு முதல்-அமைச்சர் விருதும் கலெக்டர் வழங்கினார்.

அதேபோல் சிறப்பாக பணியாற்றிய மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர் சதீஷ்பாபு, ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் கலைச்செல்வன், ஊராட்சி உதவி இயக்குனர் விஜயசந்திரிகா உள்பட 180 பேருக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

அதன்பின்னர் பல்வேறு துறைகளின் சார்பில் 101 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அதில் சமூக பாதுகாப்பு திட்டத்தில் 42 பேருக்கு முதியோர் உதவித்தொகை, 26 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா, முன்னாள் படைவீரர்கள் நலத்துறை சார்பில் 2 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் வருடாந்திர பராமரிப்பு தொகை, தோட்டக்கலைத்துறை சார்பில் 4 பேருக்கு ரூ.13 லட்சம் மானியம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 10 பேருக்கு இலவச இஸ்திரி பெட்டி மற்றும் தையல் எந்திரங்கள், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் 2 பேருக்கு ரூ.4½ லட்சம் நிதிஉதவி உள்பட மொத்தம் ரூ.59 லட்சத்து 22 ஆயிரத்து 219 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மேலும் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் எமதர்மன், சித்திரகுப்தன் வேடமணிந்தவர்கள் ஹெல்மெட் அணிவதன் அவசியம் உள்ளிட்ட சாலை விதிகளை கடைபிடிப்பது குறித்து நடித்தனர். மேலும் அரசு போக்குவரத்துக்கழக பயிற்சி பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பாடலுக்கு நடனம் ஆடி அனைவரையும் கவர்ந்தனர்.

இறுதியில் பள்ளி மாணவ- மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இதில் தேசிய ஒருமைப்பாடு, பிளாஸ்டிக் ஒழிப்பு போன்றவற்றை வலியுறுத்தும் பாடலுக்கு மாணவ-மாணவிகள் நடனமாடினர். மேலும் கரகாட்டம், கோலாட்டம் உள்ளிட்ட கிராமிய கலைகளை பிரதிபலிக்கும் வகையில் மாணவிகள் நடனமாடி அசத்தினர். இந்த விழாவில் போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், மாவட்ட வருவாய் அலுவலர் வேலு உள்பட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதேபோல் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் திண்டுக்கல் மண்டல அலுவலக வளாகத்தில் குடியரசு தினவிழா நடைபெற்றது. இதில் மண்டல பொதுமேலாளர் கணேசன் தலைமை தாங்கி தேசியக்கொடியை ஏற்றினார். பின்னர் சிறப்பாக பணியாற்றிய 12 டிரைவர்கள், 12 கண்டக்டர்கள் உள்பட 29 பேருக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றுகளை வழங்கினார். இதில் துணை மேலாளர்கள், உதவி மேலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மாவட்ட நீதிபதி ஜமுனா தேசியக்கொடியை ஏற்றினார். பின்னர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற கோர்ட்டு ஊழியர்களுக்கு பரிசுகள் வழங்கினார். இதில் நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள், வக்கீல்கள், கோர்ட்டு ஊழியர்கள் பங்கேற்றனர்.

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் கமிஷனர் செந்தில்முருகன் தேசியக்கொடியை ஏற்றினார். பின்னர் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு பாராட்டு சான்று வழங்கப்பட்டது. இதில் நகர்நல அலுவலர் அனிதா உள்ளிட்ட அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் அபிராமி கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவுக்கு மேலாண்மை இயக்குனர் குழந்தைவேல் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் வி.டி.ராஜன் முன்னிலை வகித்தார். விழாவில் தலைவர் பாரதிமுருகன் தேசியக்கொடியை ஏற்றினார். இதில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அபிராமி கூட்டுறவு சங்க இயக்குனர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர். 

Next Story