இந்து அமைப்புகளின் தலைவர்களை கொல்ல சதி திட்டம்: 17 பயங்கரவாதிகள் மீதான வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றம்


இந்து அமைப்புகளின் தலைவர்களை கொல்ல சதி திட்டம்: 17 பயங்கரவாதிகள் மீதான வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றம்
x
தினத்தந்தி 26 Jan 2020 11:05 PM GMT (Updated: 26 Jan 2020 11:05 PM GMT)

பெங்களூரு உள்பட தென்னிந்தியாவில் இந்து அமைப்புகளின் தலைவர்களை கொல்ல சதி திட்டம் தீட்டியதாக 17 பயங்கரவாதிகள் மீதான வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டு்ள்ளது.

பெங்களூரு,

சென்னை அம்பத்தூரில் இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பெங்களூரு சுத்தகுண்டே பாளையா அருேக குரப்பன பாளையாவில் வாடகை வீட்டில் வசித்து வந்த 3 பயங்கரவாதிகளை கடந்த 7-ந் தேதி சென்னை கியூ பிரிவு போலீசார் கைது செய்திருந்தனர். கைதான பயங்கரவாதிகளிடம் நடத்திய விசாரணையின் போதும், அவர்கள் கொடுத்த தகவலின் பேரிலும் கர்நாடக மாநிலம் பெங்களூரு, சாம்ராஜ்நகர், கோலாரில் பதுங்கி இருந்த 5 பயங்கரவாதிகளை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர்களில் பயங்கரவாதி மெகபூப் பாட்ஷாவும் ஒருவா் ஆவார். கைதான பயங்கரவாதிகள் கர்நாடகம் உள்பட தென்னிந்தியாவில் இந்து அமைப்புகளை சேர்ந்த தலைவர்களை கொலை செய்யவும், பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்தவும் சதி திட்டம் தீட்டி இருந்தது தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் குரப்பன பாளையாவில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக ஆயுதங்களை பயங்கரவாதிகள் பதுக்கி வைத்திருந்தனர்.

இதையடுத்து, பெங்களூருவில் நாச வேலையில் ஈடுபட சதி திட்டம் தீட்டியது, இந்து அமைப்புகளின் தலைவர்களை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக மெகபூப் பாட்ஷா உள்பட 17 பயங்கரவாதிகள் மீது பெங்களூரு சுத்தகுண்டே பாளையா போலீஸ் நிலையத்தில் கடந்த 10-ந் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசார் புகார் அளித்தனர். அதன்பேரில் மெகபூப் பாட்ஷா, இம்ரான் கான், முகமது மன்சூர், சலீம்கான் உள்பட 17 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், சுத்தகுண்டே பாளையா போலீஸ் நிலையத்தில் 17 பயங்கரவாதிகள் மீது பதிவான வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ளது.

அதன்பேரில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இந்த வழக்கு தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக கைதாகி உள்ள பயங்கரவாதிகளிடம், அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

அத்துடன் தலைமறைவாக உள்ள மற்ற பயங்கரவாதிகளை கைது செய்யவும் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். சுத்தகுண்டே பாளையா போலீஸ் நிலையத்தில் பயங்கரவாதிகள் மீது பதிவான வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டு இருப்பதை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர்.


Next Story