சேலம் ரெயில்வே கோட்டத்தில், 9 மாதங்களில் ரூ.655¾ கோடி வருவாய் ஈட்டி சாதனை - குடியரசு தினவிழாவில் கோட்ட மேலாளர் தகவல்


சேலம் ரெயில்வே கோட்டத்தில், 9 மாதங்களில் ரூ.655¾ கோடி வருவாய் ஈட்டி சாதனை - குடியரசு தினவிழாவில் கோட்ட மேலாளர் தகவல்
x
தினத்தந்தி 27 Jan 2020 3:45 AM IST (Updated: 27 Jan 2020 5:28 AM IST)
t-max-icont-min-icon

சேலம் ரெயில்வே கோட்டத்தில் கடந்த 9 மாதங்களில் ரூ.655¾ கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளதாக குடியரசு தினவிழாவில் கொடியேற்றி வைத்து கோட்ட மேலாளர் சுப்பாராவ் கூறினார்.

சூரமங்கலம்,

சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் நேற்று குடியரசு தினவிழா நடந்தது. இதில் கோட்ட மேலாளர் சுப்பாராவ் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் அவர் ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை பார்வையிட்டு ஏற்றுக்கொண்டார்.

விழாவில் ரெயில்வே கோட்ட மேலாளர் சுப்பாராவ் பேசியதாவது:-

இந்திய ரெயில்வே துறை கடந்த ஆண்டு (2019), ரெயில் விபத்தில் எந்த பயணியும் இறக்கவில்லை என்பதை பதிவு செய்துள்ளது. இது 2019-ஐ பாதுகாப்பான ஆண்டாக மாற்றியுள்ளது. ரெயில்வேதுறை வரலாற்றில் இந்த மைல்கல்லை எட்ட ரெயில்வே ஊழியர்களின் அர்ப்பணிப்பான கடின உழைப்பே காரணம் ஆகும். சேலம் ரெயில்வே கோட்டம் கடந்த நிதி ஆண்டில் (ஏப்ரல்-டிசம்பர்), 9 மாதங்களில் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் மொத்த வருவாய் ரூ.655.87 கோடி ஈட்டியுள்ளோம். இது முந்தைய ஆண்டின் அதே காலக்கட்ட வருவாயை விட 25 சதவீதம் (ரூ.526.42 கோடி) அதிகமாகும். பயணிகளின் வருவாய் மற்றும் சரக்கு வருவாய் கடந்த ஆண்டை காட்டிலும் அதிகரித்துள்ளது.

ஈரோடு, சேலம், கோவை ரெயில்வே நிலையங்களில் பேட்டரி கார் சேவைகள் வழங்கப்படுகின்றன. மேலும், இது விரைவில் கரூரில் தொடங்கப்படும். சேலம் ரெயில்வே நிலையத்தில் 5-வது நடைமேடையில் இந்த நிதியாண்டின் இறுதிக்குள் எஸ்கலேட்டர் லிப்ட் வசதி அமலுக்கு கொண்டு வரப்படும். சேலம் கோட்டம் முழுவதும் 72 நிலையங்களில் தற்போது வை-பை வசதி கிடைக்கிறது.

அனைத்து முக்கிய எக்ஸ்பிரஸ், மெயில் ரெயில்களில் இரவு பயணத்தின்போது, ரெயில்வே பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. ரெயில்வே பயணிகளுக்கு எதிராக குற்றச்செயலில் ஈடுபட்ட 109 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் ரெயில்வே சொத்தை திருடியதாக 48 பேர் கைது செய்யப்பட்டு, ரூ.2.64 லட்சம் மீட்கப்பட்டுள்ளது. ரெயில்வே நிலையங்களுக்கு வழிதவறி வந்த 393 குழந்தைகள் மீட்கப்பட்டு, மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. பெண் ஊழியர்களின் தற்பாதுகாப்புக்காக பெப்பர் ஸ்பிரே வினியோகம் செய்யப்பட்டுள்ளது.

கோவை மற்றும் சென்னை இடையே புதிய ஏ.சி. எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

இதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் சாகசங்களை நிகழ்த்தினர். இதில், மோப்பநாய்கள் பல்வேறு சாகசங்களை செய்தன. இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும், பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. விழாவில், பெண்கள் நல அமைப்பின் தலைவர் லலிதா தேவி, கோட்ட முதுநிலை வணிக மேலாளர் ஹரிகிருஷ்ணன், முதுநிலை கோட்ட பொறியாளர் முரளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story