ஊத்தங்கரை அருகே, 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு


ஊத்தங்கரை அருகே, 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 26 Jan 2020 9:45 PM GMT (Updated: 26 Jan 2020 11:58 PM GMT)

ஊத்தங்கரை அருகே தென்பெண்ணை ஆற்றங்கரையில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்வெட்டு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

ஊத்தங்கரை, 

ஊத்தங்கரை அருகே நடுப்பட்டி ஊராட்சி எட்டிப்பட்டி தென்பெண்ணை ஆற்றங்கரையில் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர், குழுத்தலைவர் நாராயணமூர்த்தி தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 300 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு தென்பெண்ணை ஆற்றில் நீர் ஓடும் பகுதியில் அமைந்துள்ளதை கண்டறிந்தனர். இது குறித்து அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் மற்றும் தொல்லியல் ஆய்வாளர் சுகவனமுருகன் ஆகியோர் கூறியதாவது:- ஆச்சாரி என்ற இனத்தை சேர்ந்த ஊத்தங்கரை பகுதியை சேர்ந்தவர்களுக்கும், பாவக்கல் பகுதியை சேர்ந்தவர்களுக்கும், தானமாக 60 பங்கு நிலத்தை சரி சமமாக பிரித்து கொடுத்ததை இக்கல்வெட்டு காட்டுகிறது. இக்கல் ஆற்றின் நீர் ஓட்டத்திலேயே இருந்ததால் மிகவும் தேய்மானம் அடைந்துள்ளது. 10 அடி உயரம் கொண்ட இந்த கல்லை அங்குள்ளவர்கள் சாசனக்கல் என்று அழைத்து வருகின்றனர்.

மேலும், 15 வரிகள் கொண்ட இக்கல்லில் வேடர்பட்டி, பாவக்கல், ஊத்தங்கரை, எட்டிப்பட்டி என்ற தற்போதுள்ள ஊரின் பெயர்கள் வருகின்றன. லக்கம்பட்டி என்பது லக்கம்பட்டினம் என கல்வெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதலால் 300 ஆண்டுகளுக்கு முன்பு லக்கம்பட்டியினுடைய பெயர் லக்கம்பட்டினம் என்று பெரிய ஊராக இருந்திருக்கலாம். அதே போல் திருமானூர் என்ற ஊரின் பெயர் மருவி திருவனப்பட்டி என்றும், வெங்களப்பட்டி என்ற ஊரின் பெயர் மருவி வேங்கடத்தாம்பட்டி என்றும் மாறியிருக்க வாய்ப்பு உண்டு. இவ்வாறு அவர்கள் கூறினர். இந்த ஆய்வின் போது, ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், விஜயகுமார், பிரகாஷ், கிராமத்தை சேர்ந்த பெருமாள், வேங்கன், சங்கர், அப்துல்லா ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story