குடியரசு தின விழா: விபத்தின்றி வாகனம் ஓட்டிய 7 பேருக்கு தங்கப்பதக்கம் - மாநகராட்சி கமிஷனர் வழங்கினார்


குடியரசு தின விழா: விபத்தின்றி வாகனம் ஓட்டிய 7 பேருக்கு தங்கப்பதக்கம் - மாநகராட்சி கமிஷனர் வழங்கினார்
x
தினத்தந்தி 26 Jan 2020 10:30 PM GMT (Updated: 27 Jan 2020 12:41 AM GMT)

குடியரசு தினவிழாவில் மதுரை மாநகராட்சியில் விபத்தின்றி வாகனம் ஓட்டிய 7 பேருக்கு தங்கப்பதக்கத்தை மாநகராட்சி கமிஷனர் விசாகன் வழங்கினார்.

மதுரை,

மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகையில் குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. கமிஷனர் விசாகன் தேசிய கொடியை ஏற்றி வைத்து சாதனை படைத்தவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். அதன்படி மதுரை மாநகராட்சியில் 20 ஆண்டுகள் விபத்தின்றி சிறப்பாக பணிபுரிந்த 7 வாகன ஓட்டுனர்களுக்கு 4 கிராம் தங்கப்பதக்கம் வழங்கினார். 10 ஆண்டுகள் விபத்தின்றி வாகனம் இயக்கிய 25 பேருக்கு ரூ.500 மதிப்புள்ள காமதேனு வங்கி வைப்புத்தொகை பத்திரமும் மற்றும் சிறப்பாக பணிபுரிந்த 85 பேருக்கு சிறப்பு விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் களையும் வழங்கினார்.

எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத் தேர்வில் மதுரை மாநகராட்சியில் முதல் இடம் பெற்ற ஆஷிகா ராணி ரூ.5 ஆயிரம், 2-ம் இடம் பெற்ற பிரியங்கா ரூ.3 ஆயிரம், 3-ம் இடம் பெற்ற மதுமிதா ரூ.2 ஆயிரம் பரிசு பெற்றனர். பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வில் முதல் இடம் பெற்ற ஷபானா ரூ.5 ஆயிரம், 2-ம் இடம் பிடித்த மோகனா லோகபிரியா ரூ.3 ஆயிரம், 3-ம் இடம் பெற்ற தேவதர்ஷினி ரூ.2 ஆயிரம் பரிசு பெற்றனர்.

தொடர்ந்து விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்த மாணவ-மாணவிகள் தலா ரூ.3 ஆயிரம் பரிசு பெற்றனர். அதன்படி தேசிய அளவில் நடைபெற்ற கேரம் போட்டியில் தனிநபர் பிரிவில் முதல் இடமும், குழுப்பிரிவில் இரண்டாம் இடமும் பெற்ற கஸ்தூரிபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி அஸ்விகா, தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான குடியரசு தினவிழா விளையாட்டு போட்டியில் இறகுபந்து போட்டியில் 2-ம் இடம் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்ற அவ்வை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜெர்லின் அனிகா.

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டியில் முதல் இடம் பெற்ற இளங்கோ மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஆறுமுக கமலேஷ், குறுவட்டம், வருவாய் மாவட்ட அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் முதலிடமும், மாநில அளவில் 2-ம் இடமும் பெற்று வெள்ளிப்பதக்கம் பெற்ற காக்கைபாடினியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நாகலெட்சுமி, குறுவட்டம், வருவாய் மாவட்ட அளவில் நடைபெற்ற தடகளப் போட்டியில் முதலிடமும், மாநில அளவில் 2-ம் இடம் பெற்று வெள்ளிப்பதக்கமும் பெற்ற காக்கைபாடினியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி சவுந்தர்யா, மாநில அளவில் நடைபெற்ற 14 வயதிற்குட்பட்டோருக்கான வாள்சண்டை போட்டியில் மூன்றாம் இடம் பெற்ற அவ்வை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி விஜயபாரதி, 17 வயதிற்குட்பட்டோருக்கான வாள்சண்டை போட்டியில் மூன்றாம் இடம் பெற்ற அவ்வை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி தஸ்லிமா பானு ஆகியோர் ரொக்கப்பரிசு பெற்றனர்.

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வில் சாதனை படைத்த பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன. மேலும் பள்ளிகளில் நடந்த பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, இசைப்போட்டி போன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து மாநகராட்சியின் சேவை பணிகளுக்கு ஒத்துழைத்த பல்வேறு தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு மாநகராட்சி கமிஷனர் பரிசு வழங்கி பாராட்டினார். முன்னதாக வெள்ளி வீதியார், கஸ்தூரிபாய் காந்தி, சுந்தராஜபுரம், காக்கை பாடினியார், மாசாத்தியார், நாவலர் சோமசுந்தர பாரதியார், தல்லாகுளம் ஆகிய மாநகராட்சி பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அதில் கலந்து கொண்டவர்களுக்கு முடிவில் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த விழாவில் துணை கமிஷனர் நாகஜோதி, நகரப்பொறியாளர் அரசு, நகர்நல அலுவலர் செந்தில்குமார், உதவி நகர்நல அலுவலர் வினோத்ராஜா, உதவி கமிஷனர்கள் பழனிசாமி, பிரேம்குமார், விஜயா, சேகர், உதவி கமிஷனர் (வருவாய்) ஜெயராமராஜா, உதவி கமிஷனர் (கணக்கு) சுரேஷ்குமார், கல்வி அலுவலர் விஜயா, மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், செயற்பொறியாளர்கள் சந்திரசேகரன், ராஜேந்திரன், முருகேசபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story