கோவையில் துணிகரம்: தொழில் அதிபர் வீட்டில் ரூ.40 லட்சம் நகை, பணம் கொள்ளை - மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு


கோவையில் துணிகரம்: தொழில் அதிபர் வீட்டில் ரூ.40 லட்சம் நகை, பணம் கொள்ளை - மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 28 Jan 2020 4:45 AM IST (Updated: 27 Jan 2020 10:38 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் தொழில் அதிபர் வீட்டின் கதவை உடைத்து ரூ.40 லட்சம் நகை, பணத்தை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை,

கோவை மசக்காளிபாளையம் பெரியார் நகர் கிழக்குப்பகுதியை சேர்ந்தவர் ஆதம்ஷா (வயது 60). இவர் கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள பட்டணம் பகுதியில் புத்தகங்களை பைண்டிங் செய்யும் எந்திரங்கள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். தொழில் அதிபரான இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

ஆதம்ஷாவின் மகனுக்கு குழந்தை பிறந்தது. அதை பார்ப்பதற்காக அவர் தனது குடும்பத்துடன் கடந்த 24-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு தூத்துக்குடிக்கு சென்றார். அங்கு தனது பேரக்குழந்தையை பார்த்துவிட்டு அவர் தனது குடும்பத்துடன் நேற்று முன்தினம் மாலையில் கோவை திரும்பினார்.

அப்போது அவருடைய வீட்டின் பக்கவாட்டில் உள்ள கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதை பார்த்ததும் ஆதம்ஷா மற்றும் மனைவி மகன்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, வீட்டில் உள்ள அனைத்து அறைகளும் திறந்து கிடந்தன.

அங்கு உள்ள பீரோக்கள் மற்றும் அலமாரிகள் அனைத்தும் திறந்து கிடந்ததுடன் அதில் இருந்த பொருட்கள் மற்றும் துணிகள் அனைத்தும் கீழே சிதறி கிடந்தன. மேலும் லாக்கரும் திறந்து கிடந்தது. அதற்குள் பார்த்தபோது அதில் இருந்த 100 பவுன் நகை மற்றும் ரூ.10 லட்சத்தை காணவில்லை. அவற்றின் மதிப்பு ரூ.40 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இது குறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கோவை மாநகர குற்றப்பிரிவு துணை கமிஷனர் உமா மற்றும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

அத்துடன் மோப்பநாய் டபியும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. அது, வீட்டின் கேட்டில் இருந்து ஒவ்வொரு அறைக்கும் சென்று வந்ததுடன் வீட்டை சுற்றிலும் ஓடியது. பின்னர் அங்குள்ள தெருவின் கார்னரில் படுத்துக்கொண்டது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

அதுபோன்று கைவிரல் ரேகை நிபுணர்களும் விரைந்து வந்து அங்கு பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர். அப்போது அங்குள்ள லாக்கரில் ஒருவரின் ரேகை மட்டும் கிடைத்துள்ளது. அதை வைத்து அங்கு கொள்ளையடித்தவர்கள் பழைய குற்றவாளிகளா அல்லது வடமாநிலத்தை சேர்ந்தவர்களா என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் ஆதம்ஷா வீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவில்லை. அதுபோன்று அவர் வசித்து வரும் தெருவிலும் கண்காணிப்பு கேமரா இல்லை. பக்கத்தில் இருக்கும் சாலையில்தான் கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. அதில் பதிவான காட்சிகளை வைத்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண் உத்தரவின்பேரில், துணை கமிஷனர் உமா மேற்பார்வையில், சிங்காநல்லூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளதுடன், இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:

ஆதம்ஷா குடியிருந்து வரும் பகுதி பொதுமக்கள் நடமாட்டம் அதிகமான பகுதி ஆகும். அவருடைய வீட்டின் உள்பகுதியில் யாராவது நின்றால்கூட வெளியே தெரிந்து விடும். அத்துடன் அந்தப்பகுதியில் இரவு 2 மணி வரை பொதுமக்கள் நடமாட்டம் இருந்து வருகிறது. அதையும் மீறி யார் உள்ளே சென்று பணம், நகையை கொள்ளையடித்தார்கள் என்பது தெரியவில்லை.

வீட்டிற்குள் சிதறி கிடக்கும் பொருட்களை வைத்து பார்க்கும்போது ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள்தான் இந்த கொள்ளையில் ஈடுபட்டு இருக்க வாய்ப்பு உள்ளது. மேலும் வீட்டிற்குள் புகுந்த மர்ம ஆசாமிகள் ஒவ்வொரு அறையாக சென்று நகை, பணத்தை தேடி உள்ளனர். ஆதம்ஷா லாக்கர் மற்றும் பீரோவை பூட்டிவிட்டு அதன் சாவிகளை அங்குள்ள அலமாரிக்குள் வைத்து சென்றுள்ளார். அந்த சாவியை எடுத்துதான் லாக்கரை திறந்து கொள்ளையடித்து உள்ளனர்.

அங்கு நடத்தப்பட்ட விசாரணையில், வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்பவர்கள்தான் இந்த கொள்ளையில் ஈடுபட்டு இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே அவருடைய வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்பவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுதவிர வடமாநில கொள்ளை கும்பல் கைவரிசையாக இருக்குமோ என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடத்தில் இருக்கும் வீட்டிலேயே மர்ம ஆசாமிகள் புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story