அறந்தாங்கியில் துணிகரம்: சர்க்கரை ஆலை ஊழியர் வீட்டில் 45 பவுன் நகைகள் கொள்ளை
அறந்தாங்கியில் சர்க்கரை ஆலை ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 45 பவுன் நகைகள், ரூ.4 லட்சம் மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி எழில் நகர் 8-ம் வீதியை சேர்ந்தவர் ராஜரத்தினம். இவர் அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் குரும்பூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் ராஜரத்தினம் மனைவி செல்வமணி திருச்சியில் உள்ள தனது மகள் துர்கா வீட்டிற்கு சென்றார்.
இதைத்தொடர்ந்து ராஜரத்தினம் நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டி விட்டு சர்க்கரை ஆலைக்கு பணிக்கு சென்றார். பின்னர் பணியை முடித்து விட்டு நேற்று காலையில் ராஜரத்தினம் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்ட ராஜரத்தினம் அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் வீட்டில் உள்ள 2 பீரோக்களை உடைத்து, அதில் இருந்த 45 பவுன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.4 லட்சத்தை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து ராஜரத்தினம் அறந்தாங்கி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த அறந்தாங்கி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் ராமன் ஆகியோர் விசாரணை நடத்தினார்கள். பின்னர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்தனர்.
இதைத்தொடர்ந்து புதுக்கோட்டையில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன.
மேலும் இந்த சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனியார் சர்க்கரை ஆலை ஊழியர் வீட்டில் 45 பவுன் நகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.4 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story