எதிர்ப்பை மீறி மதுக்கடை திறப்பு: பொதுமக்கள் மாணவ, மாணவிகள் சாலை மறியல்
கம்பம் அருகே பொதுமக்களின் எதிர்ப்பை மீறி மதுக்கடை திறக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், மாணவ-மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உத்தமபாளையம்,
கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டி 2-வது வார்டில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் அருகே அரசு மதுக்கடை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மாணவ-மாணவிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுதொடர்பாக தாசில்தார் அலுவலகத்தில் பொதுமக்கள் சார்பாக புகார் மனு அளிக்கப்பட்டது. இருப்பினும் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி நேற்று காலை அங்கு மதுக்கடை திறக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் பொதுமக்கள் அங்கு திரண்டனர். பின்னர் அவர்கள், மாணவ-மாணவிகளுடன் கம்பம்-ராயப்பன்பட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் உத்தமபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு சின்னக்கண்ணு, ராயப்பன்பட்டி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மாயன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது ஏற்கனவே காமயகவுண்டன்பட்டியில் மதுக்கடை ஒன்று உள்ளது. தற்போது பள்ளிக்கூடம் அருகே மற்றொரு மதுக்கடை திறக்கப்படுவதால் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு கேள்வி குறியாகி விடும். எனவே அங்கு மதுக்கடை செயல்பட அனுமதிக்கமாட்டோம் என பொதுமக்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீஸ் துணை சூப்பிரண்டு, மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ்க்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தார். இதையடுத்து கலெக்டரின் உத்தரவின்பேரில் அந்த மதுக்கடை உடனடியாக மூடப்பட்டது. அதன்பின்னர் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் 40 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் அந்த மதுக்கடையை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர்.
Related Tags :
Next Story