ஈரோடு முனிசிபல்சத்திரத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு - போலீஸ் பாதுகாப்புடன் மண்பரிசோதனை நடந்தது


ஈரோடு முனிசிபல்சத்திரத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு - போலீஸ் பாதுகாப்புடன் மண்பரிசோதனை நடந்தது
x
தினத்தந்தி 28 Jan 2020 10:45 PM GMT (Updated: 28 Jan 2020 5:09 PM GMT)

ஈரோடு முனிசிபல்சத்திரத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மண்பரிசோதனை நடந்தது.

ஈரோடு, 

ஈரோடு மாநகராட்சி 53-வது வார்டு மரப்பாலம் முனிசிபல்சத்திரம் பகுதியில் துப்புரவு பணியாளர்கள் தங்களது குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். அங்கு துப்புரவு பணியாளர்களுக்காக அவர்களது நிதி பங்களிப்புடன் புதிய அடுக்குமாடி கட்டிடம் கட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்காக ரூ.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

ஆனால் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு துப்பரவு பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அவர்கள் தனித்தனி வீடுகளாக கட்டிக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இந்தநிலையில் அடுக்குமாடி கட்டிடம் கட்டுவதற்காக மண் பரிசோதனை நேற்று காலை நடப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்க உள்ளதாக வந்த தகவலையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜூ, சேகர், எட்டியப்பன் ஆகியோர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இதனால் பதற்றமான சூழ்நிலை நிலவியது.

தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய செயற்பொறியாளர் வெங்கடேசன் தலைமையில் அதிகாரிகளும், மாநகராட்சி உதவி ஆணையாளர் சண்முகவடிவு மற்றும் அதிகாரிகளும் அங்கு சென்றனர். அவர்கள் மண்பரிசோதனை பணிகளை தொடங்க முயன்றபோது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், அடுக்குமாடி கட்டிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திரண்டனர். அவர்கள் கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிகாரிகளும், போலீசாரும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள் கூறியதாவது:-

நாங்கள் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பகுதியில் வசித்து வருகிறோம். ஈரோடு நகராட்சியாக இருந்தபோது துப்புரவு பணியாளர்களுக்காக வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது. இதற்கான தொகையும் சம்பளத்தில் பிடிக்கப்பட்டது. நாங்கள் வசிக்கும் பகுதியில் பட்டா கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறோம். இந்தநிலையில் அடுக்குமாடி கட்டிடம் கட்ட உள்ளதாக அரசு அறிவித்து உள்ளது. எங்களுக்கு அடுக்குமாடி கட்டிடத்துக்கு பதிலாக தனித்தனி வீடுகள் கட்டிக்கொள்ள அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதற்கு அதிகாரிகள் கூறும்போது, ‘அடுக்குமாடி கட்டிடம் கட்டுவது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுங்கள். மேலும், அடுக்குமாடி கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை. அதற்கான மண் பரிசோதனை மட்டுமே தற்போது நடக்கிறது’ என்றனர். அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் மண்பரிசோதனை நடந்தது.

இதுகுறித்து குடிசைமாற்று வாரிய அதிகாரிகள் கூறுகையில், “முனிசிபல்சத்திரம் பகுதியில் சுமார் 600 குடும்பத்தினர் உள்ளனர். இந்த பகுதியில் குடிசைமாற்று வாரியத்தின் மூலம் ரூ.75 கோடி மதிப்பீட்டில் 840 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட உள்ளது. இங்கு கட்டப்படும் வீடுகள் அனைத்தும் துப்புரவு பணியாளர்களுக்கு மட்டும்தான் ஒதுக்கீடு செய்யப்படும்”, என்றார்.

Next Story