ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி - திருவாரூரில், தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி - திருவாரூரில், தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 Jan 2020 4:00 AM IST (Updated: 28 Jan 2020 11:16 PM IST)
t-max-icont-min-icon

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவாரூர்,

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களில் விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி தேவையில்லை. பொதுமக்களிடம் கருத்து கேட்பு தேவையில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு விவசாயிகள், அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான பூண்டி கே.கலைவாணன் தலைமை தாங்கினார்.

அப்போது டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் டெல்டா மாவட்டங்களில் விவசாயம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும். நீர் ஆதாரங்கள் மாசு அடையும். மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் திருத்துறைப்பூண்டி ஆடலரசன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி தலைவர் பாலசுப்பிரமணியன், மாவட்ட துணை செயலாளர்கள் கார்த்திக், கலைவாணி, ஒன்றிய செயலாளர்கள் தேவா, கலியபெருமாள், முன்னாள் நகரசபை துணைத்தலைவர் செந்தில், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரஜினிசின்னா, மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் கருணாநிதி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் பிரகா‌‌ஷ் நன்றி கூறினார். 

Next Story